2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக தாதியர்களின் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் பல கவலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படாததால் நாளை முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க அகில இலங்கை தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
தமது தொழிற்சங்கப் போராட்டத்தின் பின்னரும் அதிகாரிகள் தமது கவலைகளை உதாசீனப்படுத்தினால், ஆயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களின் பங்கேற்புடன் சுகாதார அமைச்சை முற்றுகையிடத் தயார் என்றும் அறிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் போக்குவரத்து மற்றும் விபத்து கொடுப்பனவுகள் வழங்கப்படும் என ஜூலை மாதம் அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டதாக ஒன்றியத்தின் தலைவர் பிரபாத் பலிப்பன தெரிவித்தார்.
தாதிய உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது குறித்து குழுவொன்று தீர்மானிக்கும் அதேவேளை சீருடை கொடுப்பனவு அதிகரிக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இவ்வாறான வாக்குறுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே தமது தொழிற்சங்கப் போராட்டத்தை தீவிரப்படுத்த நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் பிரபாத் பலிப்பன குறிப்பிட்டார்.