நாளை ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடத்தப்படவிருந்த போராட்டத்திற்கு தடை விதிக்க கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் சமர்ப்பித்த சமர்ப்பணங்களையும், ஆவணங்களையும் ஆராய்ந்த பின்னர் நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொவிட் 19 தொற்றுநோய் தொடர்பில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன வழங்கிய அறிவுறுத்தல்களை மீறும் என சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் தெரிவித்திருந்த போதிலும், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
தவறான நீதிமன்றில் சட்டமா அதிபர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். அதை விசாரிக்கும் அதிகார வரம்பு உள்ள கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்
எவ்வாறாயினும், கோட்டை நீதவான் நீதிமன்றம் பிரதான நீதவான் நீதிமன்றத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் விண்ணப்பத்தை விசாரிப்பதாக நீதவான் கூறினார்.
போராட்டம் நடத்துவது பொதுமக்களின் உரிமை என்றும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதவான் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களை கைது செய்யுமாறு அவர் பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன், சட்டமா அதிபரின் விண்ணப்பத்தை நிராகரித்தார்.
எதிர்க்கட்சிகள் ஹைட் பார்க்கில் வெகுஜன பேரணியை நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பொதுக் கூட்டங்களின் அளவைக் கட்டுப்படுத்த அரசாங்கம் புதிய கொரோனா வைரஸ் விதிமுறைகளை அறிவித்துள்ளது.
வியாழன் அன்று வெளியிடப்பட்ட உத்தரவில், பொதுக் கூட்டங்களில் அதிகபட்சமாக மக்கள் கூடும் எண்ணிக்கையை தீர்மானிக்க அதிகாரிகளுக்கு அரசாங்கம் அதிகாரம் அளித்துள்ளது.