கடந்த 2021. ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி மற்றும் அதன் தலைவராக நியமிக்கப்பட்ட ஞானசார தேரர் விவகாரம் நாட்டுமக்களிடையே பலத்த சலசலப்பை உண்டாக்கியிருந்ததுடன் அரச உயர்மட்டங்களிலும் அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது. அதன் தொடர்ச்சியாக நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி பதவி விலக தயாரானார். மக்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியிருந்தாலும் தனது நாட்டுக்கும், சமூகத்திற்கும் ஆபத்தான ஒன்றாக இந்த செயலணி அமைய வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்து அமைச்சு பதவியை மட்டுமின்றி தனது அதிகாரங்களை இழக்க தயாராகிய நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர் என கிழக்கு இளைஞர் மேம்பாட்டு பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும், ஐ.நா விடயமாக ஒக்டோபர் 30 ஆம் திகதி வெளிநாட்டுக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோத்தாபய நவம்பர் 05ம் திகதி நாடு திரும்பியதும் முதல் வேலையாக “ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி” மற்றும் அதன் தலைவராக நியமிக்கப்பட்ட ஞானசார தேரர் தொடர்பில் இந்த நாட்டு மக்களிடம் உள்ள மனோநிலை, ஞானசார தேரர் தொடர்பில் சிறுபான்மை மக்களின் எண்ணங்கள் தொடர்பில் கலந்துரையாடி இந்த செயலணியினால் உருவாகப்போகும் முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் நாட்டின் நன்மை கருதி அதில் கொண்டுவர வேண்டிய விடயங்களை தெளிவாக விளக்கி அண்மையில் இரண்டாவது வெளியான அரச வர்த்தமானி அறிவிப்பில் அந்த செயலணியின் அதிகாரங்களின் சகல விஷப்பற்களையும் பிடுங்கி துறைசார் முக்கியஸ்தர்களுக்கு சிபாரிசு செய்யும் அல்லது ஆலோசனை வழங்கும் குழுவாக மட்டுப்படுத்தும் அளவிற்கு தனது ஆளுமையை வெளிக்காட்டிய நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி இந்த நேரத்தில் பாராட்டப்பட வேண்டியவர்.
இந்த விடயத்தில் நாட்டின் நன்மைகள், சிறுபான்மையினரின் நலன்களை கவனத்தில் கொண்டு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கிய பிரதமர் மஹிந்தவும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவும், இவ்விடயம் தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுத்த முஸ்லிம் எம்.பிக்களும் இங்கு கவனிக்கப்பட வேண்டியவர்கள். இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் ஆங்கில பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெளிவாக பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது.
அரசின் சார்பிலான தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு நாட்டின் முக்கிய அமைச்சுக்களில் ஒன்றான நீதியமைச்சராக இருந்து கொண்டு சமூகத்தின் அவலத்திற்காக குரல்கொடுத்த நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி பாராட்டப்பட வேண்டியவர். சிங்கள மக்களின் பெரும்பான்மை பலத்துடன் வென்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பொருந்திய அரசிடமிருந்து சமூகத்தை பாதுகாக்க போராடி வென்ற அலி சப்ரி மக்களின் பிரதிதியாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.