தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் இன்னும் 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நவம்பர் 11 ஆம் திகதி காலை வட தமிழகத்துக்கு வந்தடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்பதால் தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் 20 முதல் 25 செ.மீ மேல் மழைப் பதிவு ஆகக்கூடும்.
தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கி சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய அதிகனமழை கொட்டித் தீர்த்தது. நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சாலைகள் மற்றும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது. பிரதான ஏரிகள் நிரம்பி வருவதால் உபரிநீர் திறக்கப்பட் டுள்ளது. இதனால், நீர்வழித் தடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்த மக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 11ஆம் திகதி அதிகாலை வட தமிழக கடலோரப் பகுதியில் கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக நாளையும் நாளை மறுதினமும் (10, 11ஆம் திகதிகளில்) கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 11 ஆம் திகதிக்குப் பின்னர் மழை படிப்படியாகக் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், மீனவர்கள் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை?
நாளை, 10 ஆம் திகதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கும் புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல், 11 ஆம் திகதி கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.