அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் இன்றைய தினமும் (07) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பொகவந்தலாவை நகரில் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வீ. இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் பங்கேற்று, விலையேற்றத்தைக் கண்டித்தனர்.
இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பொகவந்தலாவை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று மூடப்பட்டிருந்தன.
“அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்கவும். வரவு – செலவுத் திட்டத்தில் நிவாரணம் வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்களின் தொழில் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரம் வழங்க வேண்டும். அதற்கான விசேட பொறிமுறை அவசியம்.” எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
–க.கிஷாந்தன்-