கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை 5 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ந்தது.
சென்னையில் அதிகப்பட்சமாக நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ கனமழை பதிவாகி உள்ளது. எம்ஆர்சி நகர், அண்ணா பல்கலைகழகம், வில்லிவாக்கம், பெரம்பூர், மீனம்பாக்கம், தரமணி, நந்தனம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ந்தது.
சென்னை பல இடங்களில் 10 செ.மீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. இதனால் நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கின.
இந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அமைச்சர்களுடன் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை, வேப்பேரி, பேரக்ஸ் ரோடு பகுதியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக வெளியூர்களில் இருந்து சென்னை வருவோர் தங்கள் பயணத்தை 3 நாட்கள் வரை ஒத்தி வைக்க வேண்டும். கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்’’ எனக் கூறினார்.
இதேவேளையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில்,
சென்னையில்மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்குவதற்காக அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை உடனடியாக திறந்து வைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதையும் மின்சாரம் இணைப்பு சரியாக உள்ளதையும் உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.