” மக்கள் எழுச்சி மூலமே இந்த அரசை விரட்டியடிக்க முடியும். சஜித் பிரேமதாச தலைமையில் மக்களுக்கான தொரு அரசு உருவாகும்.” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் பொகவந்தலாவையில் இன்று (07) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“பொய்யுரைத்து அதன்மூலம் ஆட்சியை முன்னெடுப்பதற்கே இந்த அரசு முயற்சிக்கின்றது. இன்று பொய் கூறுவதில் சிறப்பு தேர்ச்சியும் பெற்றுள்ளது.
நாட்டு மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால்தான் மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். மக்கள் போராட்டங்கள்மூலமே இந்த அரசை விரட்டியடிக்க முடியும். சஜித் தலைமையில் மக்களுக்கு நன்மை பயக்கும் அரசொன்றை நாம் உருவாக்குவோம்.
சேதன பசளை திட்டத்தை ஒரே நாளில் செயற்படுத்தவிடமுடியாது. அதற்கு நீண்டகால திட்டம் வேண்டும். ஒரே தடவையில் செய்வதற்கு முற்பட்டதால்தான் இன்று விவசாயிகள் போராடுகின்றனர். இதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விவசாயிகளுக்கு உடனடியாக உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றார்.
–க.கிஷாந்தன்-