ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பதவிக்கு கலகொடஅத்தே ஞானசார தேரரை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதியமைச்சர் அலி சப்ரி இரண்டு இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று (மே 5) கையளித்துள்ளார்.
அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை துறக்கும் இராஜினாமா கடிதங்களை கையளித்துள்ளார்.
எவ்வாறாயினும், அலி சப்ரியின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் திட்டவட்டமான சட்டம் இயற்றும் முறை இருக்கும் போது, இவ்வாறான செயலணியின் ஊடாக சட்டம் இயற்றச் செல்வது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக ஜனாதிபதியை சந்தித்த அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நியமனத்தில் திருப்தியடையவில்லை என நீதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த ஜனாதிபதி செயலணியை தாம் நியமித்திருப்பது இந்த விடயம் தொடர்பில் ஆலோசனை பெறுவதற்காகவே என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சட்டங்களை உருவாக்குவது தொடர்பில் நீதி அமைச்சரின் உதவியை நிச்சயமாக நாடவுள்ளதாக கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சர் அலி சப்ரியின் செயற்பாட்டை ஜனாதிபதி வெகுவாகப் பாராட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி நியமனம் தொடர்பில் சிலர் மத்தியில் தவறான கருத்து நிலவுவதாகவும் அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.