யாழில் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் 14 பேர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, அறிவுரையும், எச்சரிக்கையும் வழங்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 31ம் திகதி யாழ் நாவாந்துறை பகுதியில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, சர்ச்சையாகி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டார். மோதலில் ஈடுபட்ட இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள்.
தாக்கப்பட்ட மாணவன், நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்று பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.
அப்போது, கிரிக்கெட் மட்டை, விக்கெட் என்பவற்றால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புபிரிவினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பிரிவினர், ஆரம்பத்தில் தாக்குதல் நடத்திய தரப்பை சேர்ந்த 3 பேரை உடனடியாகவும், பதில் தாக்குதல் நடத்திய தரப்பை சேர்ந்த 8 பேரை பின்னரும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 14 தொடக்கம் 17 வயதுக்குட்பட்டவர்கள்.
இவர்கள் நேற்று சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
மோதலில் ஈடுபட்ட தரப்பினர் சமரசமாக செல்ல விருப்பம் தெரிவித்தனர். அவர்களிற்கு அறிவுரையும், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, பெற்றோர் – பாதுகாவலர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பிணை முறியில் கையொப்பமிட்டு விடுவிக்க உத்தரவிட்டப்பட்டது.