பத்தேகம நாகொடை வீதியின் பழைய பஸ் நிறுத்தத்திற்கு அருகில் உணவகம் ஒன்றில் கொத்து ரொட்டி வாங்க வந்த இளைஞன் தகராற்றில் ஈடுபட்ட பின்னர், அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 11.30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றது.
கொத்துரொட்டி வாங்க வந்த இளைஞனுக்கும், கடை உரிமையாளருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
கொத்து பார்சலின் அளவு சிறிதாக இருப்பதாகவும், தான் செலுத்தும் பணத்திற்கு போதுமான கொத்து கிடைக்கவில்லையென்றும் இளைஞன் தெரிவித்துள்ளார்.
எனினும், எரிவாயு, மாவின் விலைகளின்படி, பார்சலின் கொத்து அளவு இதற்கு மேல் வைக்க முடியாதென உணவக உரிமையாளர் கூறியுள்ளார்.
வீட்டில் அனைவரும் சாப்பிட கொத்து வாங்கியதாகவும், இதை எப்படி அனைவரும் சாப்பிடுவதென்றும் இளைஞன் கேட்க, விலைவாசி உயர்வினால் பார்சலின் அளவு இதுதான் என முதலாளி விடாப்பிடியாக நின்றார்.
கோபத்துடன் கொத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்ற இளைஞன், வீட்டிலிருந்த கத்தியை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்றுள்ளார்.
ஹெல்மெட்டை கழற்றாமல் கடைக்குள் நுழைந்து, உரிமையாளரை தாக்கியுள்ளார்.
கடையிலிருந்தவர்களை அவரை விலக்கி வெளியேற்ற முயல, உணவகத்திலிருந்த ஒருவரும், கடை உரிமையாளரின் மகனும் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஒருவர் கதிரையால் அடிக்க, கடை உரிமையாளரின் மகன் கொட்டான் ஒன்றினால் தாக்கினார்.
இளைஞன் கடைக்கு வெளிப்பகுதியில் தரையில் விழுந்த பின்னரும், கடை உரிமையாளரின் மகன் தொடர்ந்து தாக்கினார். இதில் அந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் சம்பவம் விற்பனை நிலையத்தில் அமைந்துள்ள சிசிரிவி கெமராவில் பதிவாகி உள்ளது.
படுகாயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவக உரிமையாளரின் 25 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.