விளையாட்டு பயிற்சிக்குகூட பயன்படுத்த முடியாத நிலைக்கு செல்லும் கிளிநொச்சி விளையாட்டு மைதான உள்ளக விளையாட்டு அரங்கு தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
கடந்த 17.03.2019 அன்று குறித்த விளையாட்டு மைதானத்தில் உள்ளக விளையாட்டரங்கு மற்றும், நீச்சல் தடாகம் என்பன அப்போதைய அரசாங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டது.
2011ம் ஆண்டு யூலைமாதம் 20ம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்சவினால் சர்வதேச தரம் மிக்க விளையாட்டு மைதானமாக அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வந்தன.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டதை அடுத்து கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி குறித்த விளையாட்டு மைதானத்தில் நிறைவுபெற்ற உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் நீச்சல் தடாகம் ஆகியன திறந்து வைக்கப்பட்டது.
உதைபந்து, கிரிக்கெட், தடகள விளையாட்டுகள், நீச்சல், உள்ளக விளையாட்டரங்கு ஆகியவற்றை உள்ளடக்கி அமைக்கப்பட்டு வந்த குறித்த விளையாட்டு மைதானத்தில் இரு பகுதிகள் மாத்திரமே நிறைவு செய்யப்பட்ட நிலையில் திறந்து வைக்கப்பட்டது.
ஆயினும் உள்ளக விளையாட்டரங்கும் தற்பொழுது பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
உள்ளக விளையாட்டரங்கின் மின்னொளியூட்டிகள் பல பழுதடைந்துள்ளதுடன், புறாக்களின் அடைக்கலம் புகும் பகுதிகளாகவும் அப்பகுதி காணப்படுகின்றது. அவ்வரங்கிற்கு வெளிச்சத்தை பெற்றுக்கொள்வதற்காக கட்டடத்தின் மேல்பகுதியில் அமைந்துள்ள ஜன்னல் வெளிகளில் ஒன்று அகற்றப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
மந்தமான வெளிச்சத்தில் விளையாட்டுக்களை துள்ளியமாக விளைாட முடியாது என்பதுடன், போட்டிகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் உறுதியான தீர்மானங்களை எடுப்பதற்கு பல்வேறு சிரமங்கள் காணப்படுகின்றமையை சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான நிலை தொடர்பில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் உரியவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வஜளையாட்டில் சாதிக்க துடிக்கும் இளைஞர் யுவதிகளிற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக அமைகின்றது.