மலையக சமூக,அரசியல்,பொருளாதார விடயங்களை அரசியல் நோக்கோடு அணுகுவதற்கும் செயற்படுவதற்குமான தளமாக ” எனும் பொதுத்தளம் நவம்பர் 30 சனிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மலையகத் தமிழ் மக்களின் சமூக அரசியலை பொதுத் தளத்தில் உரையாடுவதற்கும் பொதுக் களத்தில் செயற்படுத்துவதற்குமான அமைப்பாக மலையக அரசியல் அரங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றது. மலையகத்தின் பல மாவட்டங்களிலும் மலையகத்திற்கு வெளியேயும் செயற்பாட்டில் உள்ள, மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார நலனில் அக்கறை கொண்ட பொது அமைப்புகளும் தனிப்பட்ட ஆளுமைகளும் இந்த அரங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்து கொண்டுள்ளனர், இணைந்து கொள்ளவும் உள்ளனர்.
அரசியல் கட்சியாக அல்லாது அதே நேரம் மலையக சமூகத்தில் எழுகின்ற அரசியல் ரீதியாக பேசப்படவேண்டிய, அணுகப்படவேண்டிய விடயங்களை ஆராய்ந்து அதனைப் பொதுத் தளத்தில் அறிவார்ந்த உரையாடலாக முன்னெடுத்து அடுத்த தலைமுறை அரசியல் செயற்பாடுகளுக்கான ‘சமூக அரசியல் களத்தை’ உருவாக்குவதும் செயற்படுத்துவதும் மலையக அரசியல் அரங்கத்தின் பிரதான இலக்காகும்.
சமூக அரசியல் செயற்பாடாக சக சமூகங்களுடனும் சர்வதேச தளத்திலும் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் பிரிதிநிதியாக பங்கேற்பதும் இந்த அமைப்பின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
‘மலையகம்’ என்ற அடையாளத்தை வலியுறுத்துவதாகவும், ‘அரசியல்’ அடிப்படையில் உரையாடுவதை வெளிப்படைத் தன்மையுடன் உறுதி செய்வதாகவும், இந்தத் தளத்தில் அக்கறைகொண்ட யாருவரும் இணையலாம் என அழைப்பு விடுப்பதாக ‘அரங்கம்’ எனவும் அமைப்பின் பெயர் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
நிகழ்நிலையில் இடம்பெற்ற தொடக்க விழாவில் பல்வேறு மாவட்டங்களையும், அமைப்புகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் பிரிதிநிதிகள் கலந்து கொண்டதுடன் மலையகத் தமிழ் மக்களின் இலங்கை வருகையின் ‘இரு நூற்றாண்டு கால’ பூர்த்தியை முன்னிட்டு உரையாடல் தலைப்புகளும் செயற்பாட்டு உபாயங்களும் விவாதிக்கப்பட்டு முதற்கட்டமாக அனைவரதும் பங்களிப்புடன் இருபது விடயதானங்கள் (Themes) அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனை முன்னெடுப்பதற்கான விடயதான தலைவர்களும் (Theme Leaders) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்து வரும் மாதங்களில் இந்த ஒவ்வொரு விடயதானங்களையும் பொது வெளியில் உரையாடவும் உரிய இடங்களை நோக்கி அதனை நகர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.