ஒருநாடு ஒருசட்டம் எனும் பெயரில் ஜனாதிபதி செயலணியால் உருவாக்கப்பட்ட உறுப்பினர்களில் தமிழர்கள் எவரும் இடம்பெறாமை தமிழர்களுக்கு தனிநாடு உள்ளது என்பதையே கோடிட்டுக்காட்டுகிறது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரயநேத்திரன் தெரிவித்தார்.
ஒருநாடு ஒருசட்டம் தொடர்பான செயலணி தொடர்பாக மேலும் கருத்துக்கூறுகையில்-
சர்ச்சைக்குரிய ஞானசார தேரரை தலைவராகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணியில் தமிழர்கள் எவரும் அங்கம் வகிக்காமை தமிழர்களுக்கு ஒருநாடு இலங்கையில் இல்லை அவர்களுக்கு தனிநாடு இருக்கிறது என்ற எண்ணமே இதன்மூலம் சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. இந்த செயலணியில் 13 பேரில் ஒன்பது சிங்களவரும், நான்கு முஷ்லிம்களும் நியமிக்கப்பட்டுள்ளது தமிழர்களை முற்றாக புறம்தள்ளும் செயலாகவே பார்க்க முடிகிறது. இந்த செயலணி மீது நம்பிக்கையில்லை என்பது ஒரு புறம் இருக்க மூன்று இன மக்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரு இனத்தை புறக்கணித்து எப்படி ஒருநாடு ஒருசட்டம் உருவாக்கமுடியும்.
உண்மையில் பக்கசார்பற்ற ஒரு நடுநிலை செயலணியாக இது அமைக்கப்பட வேண்டுமானால் தமிழர்களும் இச்செயலணியில் உள்வாங்கப்பட்டிருக்கவேண்டும்.
மாறாக இந்த விடயத்தில் கூட ஜனாதிபதி தமிழர்களை அலட்சியப்படுத்தியுள்ளதாக கருதவேண்டியுள்ளது.
தமிழுக்கும் தமிழருக்கும் என ஒரு அடையாளம் இலங்கையில் பண்டைக்காலம் தொட்டு இருந்து வருகையில் ஒரு நாடு ஒரு சட்டம் என்பதின் அர்த்தம் என்ன? இலங்கை ஒரு நாடு அல்ல. அது சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், மலையக மக்கள் மேலும் பல சிறிய இன மக்கள் வாழும் பல்லின பண்பாடு அடையாளங்களை கொண்ட நாடு.
வடக்கு கிழக்கு தாயகம் என்பது தமிழ்மக்களின் பூர்வீக வரலாறுகளை கொண்ட நிலமாக கருதப்பட்டது அதனால் யாழ்ப்பாணத்தில் 1707,ம் தேசவழமை சட்டமும், மட்டக்களப்பில் 1876,ல் முக்குவர் சட்டம் ஆங்கிலேயரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இருந்து வந்தது அப்போது ஆங்கிலேயரான சி.விறிற்றோ(C.BRITO) என்பவர் முக்குவர் சட்டத்தை நூலாக எழுதி வெளியிட்டார் இதனால் ஆங்கிலேயரால் அங்கிகாரம் கிடைத்தது. எனினும் பின்னர் இலங்கை சுதந்திரம் அடைந்த1948, ம் ஆண்டுக்கு பின்னர் முக்குவர் சட்டம் மறைந்து விட்டது.
ஆனால் யாழ்ப்பாணம் தேசவழமைச்சட்டம் இன்றும் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.
இதுபோலவே கிழக்கில் முஸ்லிம்களின் அவர்களின் மத நம்பிக்கை அடிப்படையில் இஸ்லாமிய சரிஆ சட்டம் இலங்கையின் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எனவே இலங்கையில் இன மத குல ரீதியான சட்டங்கள் பல்நெடுங்காலமாகவே நடைமுறையில் இருந்து வந்ததை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
தற்போது ஒரு நாடு ஒரு சட்டம் எனும் தொனிப்பொருளில் மாற்றங்களை கொண்டுவரும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட செயலணி ஆனது ஆரம்பத்திலேயே தமிழர்களின் கருத்துக்களை முற்றாக புறக்கணிக்கும் செயலணியாகவே செயல்படும் என்பதையே இந்த 13,பேர் கொண்ட குழுவில் தமிழர் எவரும் இடம்பெறாமையை காட்டுவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.