உர விவகாரம் தொடர்பான கருத்துக்களைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
உர விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தில் உள்ளவர்களின் கருத்தை இவ்வாறான வாக்கெடுப்பின் மூலம் புரிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
டிசெம்பர் மாதத்திற்குப் பின்னர் இலங்கையில் பருப்பு அல்லது கொத்தமல்லி இருக்காது என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆதரவளிக்கும் என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர், அரசாங்கம் மக்களின் கருத்தைக் கேட்டு யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாட்டிலுள்ள குடிமக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், நாடு பாழடைந்த நிலைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்தின் மீதும் அதன் செயற்பாடுகள் மீதும் பொதுமக்கள் முற்றாக ஏமாற்றமடைந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க தெரிவித்துள்ளார்.
தரமற்ற உரத்தை இறக்குமதி செய்வதன் பின்னணியில் உள்ள அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் எதிர்காலத்தில் அவர்களின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு நாடும் 100 சதவீத கரிம உரப் பாவனைக்கு மாறவில்லை என்பதும், அது சாத்தியமற்றது என்றும் அவர் கூறினார்.
சிலோன் தேயிலையின் பெயர் பாதிக்கப்படும் பட்சத்தில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் பாரியளவில் பாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய அமைச்சர்கள் உட்பட ஜனாதிபதியைச் சுற்றியுள்ள நபர்களின் ஆலோசனைகள் விவசாயிகளை அரசியல் தொடர்பு கொண்டவர்கள் என்று முத்திரை குத்துவதாகவும், எனவே அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறிவிட்டதாகவும் கூறினார்.
சீனாவின் இராஜதந்திர அழுத்தத்தின் காரணமாக தரமற்ற இயற்கை உரங்களின் இருப்புக்களை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதால், கப்பலை திருப்பி அனுப்பலாம், ஆனால் மீண்டும் இலங்கைக்கு வர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.