2025ஆம் ஆண்டு வரை சாப்பாட்டின் அளவை குறையுங்கள்: நாட்டு மக்களுக்கு வட கொரிய ஜனாதிபதி உத்தரவு!

Date:

2025 ஆம் ஆண்டில் சீனாவுடனான எல்லைகளை திறக்கும் வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்.

வட கொரியாவில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவுகிறது. கொரோனா அச்சுறுத்தலால் வட கொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்கு சீல் வைத்துள்ளது. குறிப்பாக உணவுப் பொருட்கள், எரிபொருள் என மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் கூட மூடியுள்ளது.

இதனால் அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் 45 டொலர், 32 யூரோவாக இருக்கிறது. வட கொரிய மக்கள் மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கிம் ஜோங் உத்தரவிட்டுள்ளார்.

வட கொரிய மக்களும் தற்போது நிலவும் உணவுப் பஞ்சம், வரும் குளிர் காலத்தைக் கூட கடக்க முடியாத அளவுக்குக் கடுமையாக இருக்கிறது. இதில், 2025 வரை எப்படி குறைவாக உண்ண உத்தரவிட்டால் எப்படி எனத் தவிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வட கொரியாவின் சினுயிஜு நகர வாசி அரசாங்கத்தின் புதிய விதிமுறைகள் பற்றிக் கூறுகையில், “2025 வரை அரசாங்கம் குறைவாக உணவு உண்ணச் சொல்கிரது. இப்போதே உணவுக் கையிருப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. அன்றாடம் பற்றாக்குறையால் கடுமையாகத் தவிக்கிறோம். எங்களுக்கு இதனை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. வெறுமையும், அவநம்பிக்கையும் தான் உள்ளது.

அரசாங்கம் எங்களுக்குத் தேவையான தானியங்களை நாங்களே உற்பத்தி செய்யுமாறு ஊக்குவிக்கிறது. ஆனால் அது அவ்வளவு எளிதானது இல்லை. 2025 வரை இதைத் தாங்கிக் கொள்ளச் சொல்வதும், பட்டினியில் சாகச் சொல்லவதற்கு சமம்” என்றார். வெளிநாட்டு ஊடகத்துக்குப் பேட்டியளித்த அந்த நபர் தனது அடையாளத்தை வெளிப்படுத்திவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

எனினும், உணவுப் பற்றாக்குறைக்கு வெளிப்புற காரணிகளை வடகொரிய அரசு தெரிவித்து வருகிறது. தம் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள், இயற்கை பேரழிவுகள் மற்றும் உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயை மேற்கோள் காட்டி வருகிறது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு வட கொரியாவில் சுமார் 860,000 தொன் உணவு பற்றாக்குறை இருப்பதாக ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மதிப்பிட்டுள்ள நிலையில், மக்களிடையே அவநம்பிக்கைஅதிகரித்து வருவதாக சினுயிஜு நகர வாசி கூறினார்.

கடந்த ஆண்டு, வட கொரியா கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான குடும்பங்களை வீடுகளை இழக்கச் செய்தது. இந்த ஆண்டு வறட்சி மற்றும் வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்தன.

ஓகஸ்டில், வடகிழக்கு வட கொரியாவில் பெய்த கனமழையால் 1,170 வீடுகள் அழிந்தன அல்லது வெள்ளத்தில் மூழ்கின மற்றும் 5,000 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர் என்று வட கொரியாவின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

தெற்கு ஹம்கியோங் மாகாணத்தில் பெய்த மழையால் நூற்றுக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் அடித்துச் செல்லப்பட்டு பல பாலங்கள் நாசமாகின. வீடுகள் அவற்றின் கூரைகள் வரை நீரில் மூழ்கியிருப்பதை படங்கள் காட்டின.

விவசாய அழிவு, எல்லைகள் மூடப்பட்டது என எல்லாமும் சேர்ந்து வடகொரியாவை மோசமாக பாதித்துள்ளது.

ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயக் கழகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “வடகொரியா தனது உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாவிட்டால் ஓகஸ்ட் தொடங்கி ஒக்டோபருக்குள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும்” என ஏற்கெனவே எச்சரித்திருந்தது. அது நடந்து கொண்டிருக்கிறது.

வடகொரியாவில் பொருளாதாரம் ஏற்கெனவே ஆட்டம் கண்டுள்ளது. அணுஆயுதப் பரிசோதனைகள் அந்நாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. இந்நிலையில் தற்போது உணவுப் பஞ்சமும் ஏற்பட்டிருக்கிறது.

1990களில் சோவியத் யூனியன் சுக்கு நூறாக நொறுங்கியது. அதுவரையில் சோவியத் யூனியனை இறக்குமதி பொருட்களுக்காக பெருமளவில் நம்பியிருந்த வடகொரியா பெரும் பஞ்சத்தை சந்தித்தது. அந்தப் பஞ்சத்தின்போது இலட்சக்கணக்கான வடகொரியர்கள் உயிரிழந்தனர். இப்போதுஅப்படியொரு சவாலை மீண்டும் வடகொரியா எதிர்கொண்டுள்ளது எனக் கூறுகின்றனர் சர்வதேச நிபுணர்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்