யானைக்குக் கம்பீரத் தோற்றம் அளிப்பவை அவற்றின் தந்தங்கள். கனமான கிளைகளைத் தூக்கி வீசவும், மரங்களை அகற்றவும், பட்டைகளை நீக்கவும், சண்டையிடவும் தந்தங்கள் அவற்றுக்கு உதவுகின்றன.
யானைகள் தண்ணீருக்காகத் துளை தோண்டவும் தந்தங்களைப் பயன்படுத்துகின்றன.
ஆனால் தந்தங்களுக்காக அவை கொடூரமாக வேட்டையாடப்படுவதால் அதிகமான யானைகள் தந்தங்கள் இல்லாமல் பிறப்பதாகக் கூறப்படுகிறது.
அது குறித்து சிஎன்என் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
மொசாம்பிக்கின் கோரோங்கோசா தேசியப் பூங்காவில் பல யானைகள் முற்றிலும் தந்தங்கள் இல்லாமல் பிறந்துள்ளன.
15 வருடங்கள் நீடித்த மொசாம்பிக்கின் உள்நாட்டுப் போரில் தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்பட்டது அதற்குக் காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
1992 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பிறகு, இத்தகைய போக்கு அதிகம் தென்படத் தொடங்கியதாக பூங்காவில் பணிபுரியும் யானை நிபுணர்கள் தெரிவித்தனர்.
போரின் போது யானைகளைக் கொன்று தந்தங்களை விற்று ஆயுதங்கள், வெடிமருந்துகள் ஆகியவற்றைப் போர் வீரர்கள் வாங்கியிருக்கின்றனர்.
1972ஆம் ஆண்டுக்கும் 2000ஆம் ஆண்டுக்கும் இடையே தந்தமில்லாமல் பிறந்த
பெண் யானைகளின் விகிதம் மும்மடங்கு அதிகரித்துள்ளது.
அவை தந்தங்களில்லாத வாழ்க்கைக்குத் தயாராகியிருக்கின்றன என்றாலும் நமக்குத் தெரியாத பல அம்சங்கள் இதில் மறைந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.