ஜப்பான் நாட்டு இளவரசி மகோ, பாரம்பரிய விழாக்கள் இல்லாமல் சாதாரண நபரைப் போல் தனது காதலர் கெய் கொமுரோவை இன்று (26) காலை திருமணம் செய்து கொண்டார். இதற்கான ஆவணத்தை ஜப்பான் அரச குடும்ப அரண்மனை வெளியிட்டுள்ளது.
ஜப்பான் பேரசர் நருஹிட்டோ. இவரது மருமகள் மகோ. இவர் அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரைக் காதலித்து வந்தார். அரசக் குடும்பத்துப் பெண்கள் சாதாரண நபர்களைத் திருமணம் செய்துகொள்ள தடை உள்ளது. இதனால் கடந்த பல ஆண்டுகளாகவே இவர்களின் திருமணத்துக்கு முட்டுக்கட்டை நிலவியது.
இந்நிலையில், இந்த ஜோடி பாரம்பரிய முறையில் இல்லாமல், வழக்கமான கொண்டாட்டங்களைத் தவிர்த்து சாமான்யர்களைப் போல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தன.
இந்நிலையில், மகோ, கெய் கொமுரோ திருமணம் இன்று காலை இனிதே நிறைவேறியது.
அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் சாமான்யரை திருமணம் செய்து கொள்ளும் போது ஒரு குறிப்பிட்ட தொகை அவருக்கு சீதனமாகக் கொடுக்கப்படும். அந்தத் தொகையைத் தான் மகோ வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் இவ்வாறாக அரச குடும்பத்தின் சீதனத்தை நிராகரிக்கும் முதல் பெண் மகோ தான்.
மேலும், அரச கும்பத்தின் பெயரையும் தனது பெயருக்குப் பின்னால் அவர் பயன்படுத்த மாட்டார். அவரது கணவரின் குடும்பப் பெயரையே மகோ இனி பயன்படுத்துவார்.
மகோவின் சகோதரர் இளவரசர் ஹிசாஹிடோ. இவர் தான் இப்போதைக்கு அரச குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசு. இவர்தான் ஜப்பானின் க்ரைசாந்திமம் அரியணைக்கு உரிமையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தினரிடமிருந்து விடை பெற்றார் மகோ:
இன்று அதிகாலை, அரண்மனையிலிருந்து மகோ வெளியேறினார். முன்னதாக அவர் தனது பெற்றோர், இளவரசர் அகிஷினோ, இளவரசி கிகோ மற்றும் தங்கை ககோ ஆகியோரை ஆரத்தழுவி உணர்ச்சி பொங்க பிரியாவிடை பெற்றார். அப்போது அவர் மிகவும் எளிமையாக ஆடை அணிந்திருந்தார். வெளிர் நீல நிற ஆடையில் தந்தை, தாய், சகோதர, சகோதரிகளை தழுவி விடை பெற்றார்.