வவுனியாவில் சிங்கள இளைஞனை காதல் திருமணம் செய்த மல்லாவியை சேர்ந்த 18 வயது இளம் பெண்ணை, பெற்றோர் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த 19 வயதான சிங்கள இளைஞனும், மல்லாவியை சேர்ந்த 18 வயதான தமிழ் யுவதியும் காதலித்து, கடந்த யூலை மாதம் வவுனியாவில் பதிவுத் திருமணம் செய்துள்ளனர்.
திருமணத்தின் பின் தேக்கவத்தையிலுள்ள கணவன் வீட்டில், மல்லாவி இளம்பெண் தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (22) வாகனமொன்றில் சென்ற பெண்ணின் உறவினர்கள் தரப்பினர், வீடு புகுந்து இளம்பெண்ணை பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். இதை தடுக்க முயன்ற கணவனின் தந்தையையும் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. வவுனியா பொலிசாரால் மல்லாவி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு, மல்லாவி பொலிசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற போது, வீடு பூட்டப்பட்டிருந்தது.
பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.