ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத் தலைநகர் மெல்பர்ன், சுமார் 9 மாத முடக்கத்துக்குப் பின்னர் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது. அதாவது, உலகில் மிக நீண்டகாலம் முடக்கத்தில் இருந்த நகர், அதிலிருந்து மீண்டுள்ளது.
தெருக்களில் ஒன்றுகூடல்கள், கொண்டாட்டங்கள், நேரடி இசை நிகழ்வுகள் எனக் குதூகலமும் கொண்டாட்டமும் நிறைந்துள்ளன. மதுக்கூடங்களும் உணவகங்களும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளன.
இன்று காலை பெய்த மழையைப் பொருட்படுத்தாமல் அதிகமானோர் அத்தகைய கடைகளுக்குள் நுழையக் காத்திருந்தனர். முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அவ்வாறு, பொது இடங்களுக்குச் செல்ல அனுமதி உண்டு.
இந்நிலையில், விக்டோரியாவில் டெல்ட்டா தொற்று அதிகரித்துக்கொண்டிருக்கும் வேளையில் அங்கு மேலும் 1,750 பேர் பாதிப்படைந்துள்ளனர். 24 மணி நேர இடைவெளியில் 9 பேர் உயிரிழந்தனர்.
எனினும் விக்டோரியா, அதன் மக்களில் 90 வீதமானவர்களக்கு முழுமையாகத் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்று முனைப்புடன் இயங்குகிறது.