பண மோசடி வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ள நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர், அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாக கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்து இருப்பதாக புகார்கள் உள்ளன.
கடந்த 2017ஆம் ஆண்டு அ.தி.மு.க. பிளவுப்பட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி. தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி டெல்லி குற்றவியல் போலீசார் டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன், தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் டி.டி.வி. தினகரன் உள்பட பலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் சுகேஷ் சந்திரசேகர் மட்டும் சிறையில் உள்ளார்.
இதற்கிடையில், 200 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்ததாக சுகேஷ் மீது டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் மற்றொரு வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த பண மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான பண மோசடி வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ள நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணியளவில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆஜரானார்.
அவரிடம் சுகேஷ் சந்திரசேகரின் பணமோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 6 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த விசாரணையில் சுகேஷ் சந்திரசேகரின் பணமோசடி குறித்த பல்வேறு தகவல்களை நடிகை ஜாக்குலின் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.