அண்மையில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கொலின் பவெல் மறைந்தார். அவருக்கு உலகமே மரியாதையுடன் இரங்கல் தெரிவிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மட்டும் வசைபாடிக் கொண்டே இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
ஈராக் போரில் பெருந்தவறை இழைத்த கொலின் பவெலை, அவரது இறப்பில் போலி ஊடகக் குழுமங்கள் அழகாகக் கொண்டாடியிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது ரொம்பவே, ஆச்சரியமாக இருக்கிறது. இது எனக்கும் ஒரு நாள் நடக்கும் போலவே! பவெல் ஒரு கிளாசிக் ரைனோ அதான், ரிபப்ளிக்கன் இன் நேம் ஒன்லி அதாவது பெயரளவில் குடியரசுக் கட்சிக்காரர். அவர் எண்ணிலடங்கா தவறுகளை இழைத்துள்ளார். ஆனாலும் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முதல் கருப்பின வெளியுறவுத்துறை செயலர் என்ற பெருமைக் குரியவர் கொலின் பவெல். அமெரிக்க இராணுவத்தின் முப்படை தலைமை தளபதியாகவும் பணி புரிந்தவர் ஜெனரல் கொலின் பவெல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் அமைச்சரவையில் அவர் இடம்பெற்றி ருந்தார். இவர் 2001ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை அமைச்சர் பதவி வகித்தார். இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
வருத்தம் தெரிவித்த பவெல்
ஈராக்கில் பேராபத்து அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. சதாம் உசேன் கொல்லப்பட்டார். ஆனால், பின்னர் ஈராக்கில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அப்படி ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னாளில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ஈராக் போருக்கான நியாயத்தை எடுத்துரைக்க முடியாமல் பவெல் திணறினார்.
அது குறித்து ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு அவர் ஒருமுறை அளித்த பேட்டியில், “அது ஒரு கருப்புப் புள்ளி. எனது வரலாற்றில் எப்போதும் அது இருக்கும். அது அப்போதும் வேதனை அளித்தது. இப்போதும் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.