கொக்குவில் புகைப்பட கலையக உரிமையாளரால் 13 வயது சிறுமி வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவிலில் புகைப்பட கலையகம் நடத்துபவரும், அவரது மனைவியான அழகுக்கலைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொக்குவிலில் உள்ள அந்த தம்பதியின் வீட்டில், அழகுக்கலைஞரின் ஒன்றுவிட்ட சகோதரியான 13 வயது சிறுமி தங்கியிருந்தார். அவரது பெற்றோர் பிரிந்து விட்டனர்.
சிறுமி உடல்நல குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் வன்புணரப்பட்டது தெரிய வந்தது.
புகைப்பட கலையக உரிமையாளர் சில காலமாக வன்புணர்விற்குள்ளாக்கி வருவதாக சிறுமி வாக்குமூலமளித்துள்ளார்.
இதையடுத்து, புகைப்பட கலையக உரிமையாளர் கைதானார்.
சிறுமியின் கையடக்க தொலைபேசியில் இருந்த சில தனிப்பட்ட புகைப்படங்களை காண்பித்து, சிறுமி தொடர்பான தவறான கருத்துக்களை பரப்ப முயன்ற குற்றச்சாட்டு மனைவி மீது சுமத்தப்பட்டு, அவரும் கைதானார்.
இந்த நிலையில், கோண்டாவில் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவரும் இந்த விவகாரத்தில் கைதாகியுள்ளார். கைதான தம்பதியினரின் குடும்ப நண்பரான அந்த இளைஞனும், சிறுமியின் புகைப்படங்களை வைத்திருந்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.