அமெரிக்க முன்னாள் வெளியுறவுச் செயலர் கொலின் பவல் கொரோனாவால் காலமானார். அவருக்கு வயது 84.
அமெரிக்காவின் முதல் கருப்பின வெளியுறவுத்துறை செயலர் என்ற பெருமைக்குரியவர் கொலின் பவெல். பாவெலின் பெற்றோர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்க இராணுவத்தின் முப்படை தலைமை தளபதியாகவும் பனி புரிந்தவர் ஜெனரல் கொலின் பவெல்.
1991 ஆம் ஆண்டு வளைகுடா போருக்குப் பின்னர் பவெலின் மதிப்பு அமெரிக்காவில் பல மடங்கு அதிகரித்தது. அவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க மக்கள் ஆதரவுக்குரல் எழும்பியது.
20 ஆம் நூற்றாண்டின் இறுதி, 21 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் என அமெரிக்க வெளியுறவு கொள்கையை வகுப்பதில் மிக முக்கியப் பங்காற்றியவர் கொலின் பவெல்.
கொலின் பவெலின் மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் சமூக ஊடகத்தில் பகிர்ந்த செய்திக் குறிப்பில், “நாங்கள், ஒரு அன்பான கணவரை, தகப்பனை, தாத்தாவை ஒரு நல்ல அமெரிக்கரை இழந்துவிட்டோம். கொலின் பவெல் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியிருந்தார். இருப்பினும் அவருக்குக் கொரோனா பாதித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலின் பவெலுக்கு அல்மா என்ற மனைவியும், மிச்செல், லிண்டா மற்றும் ஆன் மேரி என்ற பிள்ளைகளும் உள்ளனர்.
வருத்தம் தெரிவித்த பவெல்:
ஈராக்கில் பேராபத்து அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. சதாம் உசேன் கொல்லப்பட்டார். ஆனால், பின்னர் ஈராக்கில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அப்படி ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னாளில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ஈராக் போருக்கான நியாயத்தை எடுத்துரைக்க முடியாமல் பாவெல் திணறினார்.
அது குறித்து ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு அவர் ஒருமுறை அளித்தப் பேட்டியில், “அது ஒரு கருப்புப் புள்ளி. எனது வரலாற்றில் எப்போதும் அது இருக்கும். அது அப்போதும் வேதனை அளித்தது. இப்போதும் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.