ஆப்கானிஸ்தான் தொடர்பாக ரஷ்யா நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறும்போது, “இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். ஆனால், இந்த வாரம் நடக்கும் பேச்சுவார்த்தையில் நாங்கள் பங்கேற்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆப்கானில் தலிபான்கள் தலைமையிலான அரசை அங்கீகரிக்கக் கூடாது என்பதை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளில் விரைவில் நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யா அழைப்பு
ஆப்கானிஸ்தான் தொடர்பாக மொஸ்கோவில் ஒக்டோபர் 20ஆம் திகதி ரஷ்ய ஜனாதிபதி புதின் தலைமையில் சர்வதேசக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தலிபான்களுக்கும் ரஷ்யா அழைப்பு விடுக்கவுள்ளது.
ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, தனது இராணுவ பலத்தை அதிகரிக்க தஜிகிஸ்தானில் ரஷ்யா இராணுவப் பயிற்சிகளை நடத்தியதுடன், அங்குள்ள இராணுவத் தளத்தில் அதன் ஆயுதங்களையும் பலப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இப்பேச்சுவார்த்தையை ரஷ்யா நடத்துகிறது. இப்பேச்சுவார்த்தையில் சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் கலந்து கொள்கின்றன.
பின்னணி
ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி அறிவித்தனர்.
ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 90களில் தலிபான்களின் ஆட்சி அச்சம் தரும் வகையில் இருந்ததால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர். ஆனால், மக்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தலிபான்கள் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.