படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின், 21வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
2000ஆம் ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் கச்சேரியடிப் பகுதியில், உள்ள தனது வீட்டில் ஊடகங்களுக்கு செய்தி எழுதிக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ம.நிமலராஜன், ஆயுததாரிகளால் துப்பாக்கியால் சுட்டும், குண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று பகல் 11.30 அளவில் நினைவேந்தல் நிகழ்வில் நிமலராஜனின் உருவப்படத்திற்கு யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனும் வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோசும் இணைந்து மலர் மாலை அணிவித்தார்.
அதனையடுத்து யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ஜெயசீலன் நினைவுச்சுடரை ஏற்றியதுடன் ஊடகவியலாளர்கள் பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு 10 மணியளவில் யாழ்ப்பாணம் நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக அப்போது இருந்த, கச்சேரியடிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார்.
அன்று மாலையில், நாகர்கோவிலில் விமானப்படை உலங்குவானூர்தி விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட செய்தியை பிபிசி தமிழோசைக்கு தொலைபேசி மூலம் வழங்கிவிட்டு, வீரகேசரி நாளிதழுக்காக தொலைநகலில் அனுப்புவதற்காக அந்தச் செய்தியை எழுதிக் கொண்டிருந்த போதே, அவரது வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப்படுகொலை செய்தனர்.
அதையடுத்து, அவரது வீட்டுக்குள் கைக்குண்டை வீசிவிட்டுச் சென்றதில், நிமலராஜனின் தந்தை, தாய், மருமகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.