லிபியாவில் கரை ஒதுங்கிய 2 படகுகளில் இருந்து 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. படகுகளில் இருந்து 187 பேர் மீட்கப்பட்டனர்.
“திங்கள்கிழமை மாலை திரிபோலி கடற்படை தளத்திற்கு வந்த 2 படகுகளில்16 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. தப்பிப்பிழைத்த 187 பேருக்கு உதவி வழங்கப்பட்டது, சிலருக்கு UNHCR மற்றும் சர்வதேச மீட்புக் குழு அவசர மருத்துவ உதவி தேவை” என்று UNHCR ட்வீட் செய்தது.
“பயணிகள் முந்தைய நாள் இரவு ஸ்வாரா மற்றும் அல்கோம்ஸிலிருந்து (மேற்கு லிபியா) புறப்பட்டனர்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2011 இல் மறைந்த தலைவர் முஅம்மர் கடாபியின் வீழ்ச்சியிலிருந்து லிபியா பாதுகாப்பின்மை மற்றும் குழப்பம் காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறது. லிபியாவிலிருந்து ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறியவர்கள் மத்திய தரைக் கடலை கடந்து ஐரோப்பிய நாடுகளிற்கு செல்ல முயல்கிறார்கள். அவர்களில் பலர் வழியில் உயிரிழக்கின்றனர்.
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (ஐஓஎம்) தகவல் படி, இந்த ஆண்டு இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 26,314 சட்டவிரோத குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டு லிபியாவுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மத்திய தரைக்கடலில், லிபிய கடற்கரையில் 474 பேர் இறந்தனர் மற்றும் 689 பேர் காணாமல் போயுள்ளனர்.