தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு தற்போது காணப்படும் குறைந்தபட்ச வயதெல்லையைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தயாரிக்கப்பட்ட அடிப்படைச் சட்டமூலம், பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஆடைக் கைத்தொழிற்துறை மற்றும் வர்த்தகத் துறைகளில் தாக்கம் செலுத்தும் கொள்கை ரீதியானதும் சட்டரீதியானதுமான விடயங்கள் பற்றி ஆராயும் குழுவில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினர்களின் பங்கேற்புடன் தொடர்ந்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த குழுவில் எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கமைய முன்மொழியப்படும் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளில் 52 வயதை எட்டாத ஊழியர்களின் ஒய்வு வயதை 60 வரைக்கும் நீடிப்பதற்கும், சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியில் 52 வயது அல்லது அதற்கு அதிகமான ஊழியர்களின் வயதுக்கேற்ப மூன்று பிரிவுகளின் கீழ் உயர்ந்தபட்சம் 59 வயது வரை பணியாற்றுவதற்கு இயலுமான வகையில் ஏற்பாடுகளை உள்வாங்கி சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் குறைந்தபட்ச வயதுச் சட்டத்தைப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக தொழில் உறவுகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.