ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு நகரமான குண்டூஸில் உள்ள ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின் போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பிற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.
ஆப்கானிஸ்தானை ஓகஸ்ட் மாதத்தில் தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது.
கோரசன் மாகாண இஸ்லாமிய அரசு, ISKP (ISIS-K) தனது டெலிகிராம் சனல்கள் மூலம் இந்த தாக்குதலுக்கு வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றது.
கோசார்-இ-சயீத் அபாத் மசூதிக்குள் சிறுபான்மை ஷியா முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த வழிபாட்டாளர்கள் மத்தியில் நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து முரண்பட்ட அறிக்கைகள் உள்ளன. இந்த குண்டுவெடிப்பில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் என்று ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகள் சபை ருவிட்டரில் தெரிவித்துள்ளது.
குண்டூஸ் மாகாணத்தின் துணை போலீஸ் தலைவர் தோஸ்த் முகமது ஒபைதா, இந்த தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலோர் கொல்லப்பட்டனர்” என்று கூறினார்.
“எங்கள் ஷியா சகோதரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தலிபான்கள் தயாராக இருப்பதாக நான் உறுதியளிக்கிறேன்,” என்று ஒபைடா கூறினார்.
இதற்கிடையில், குண்டூஸ் நகரத்தின் கான் அபாத் பகுதியில் உள்ள மசூதிக்குள் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டதாகவும், 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரியின் பெயர் முஹம்மது என்றும் அவர் உய்கூர் முஸ்லீம் என்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.