இலங்கை இராணுவம், விடுதலைப் புலிகளுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பும் குற்றவிசாரணைக்குட்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார் ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய வரவு செலவு திட்டத்தில் எமது மக்களின் வாழ்வாதார திட்டங்களிற்காக பல மில்லியன் நிதியை அமைச்சர் பசில் ராஜபக்ச ஒதுக்குவதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.
கடந்தகாலத்தின் ஏமாற்று வேலைத்திட்டங்களில் ஒன்றான சஜித் பிரேமதாசவின் வீட்டு திட்டத்தால் இன்றும் மக்கள் இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். மழைக்காலத்தில் அந்த மக்கள் இன்னல்களை சந்திக்கிறார்கள். இதுபற்றி இராஜாங்க அமைச்சருடன் பேசியிருக்கிறோம். வரும் வரவு செலவு திட்டத்தில் இந்த விடயத்திற்கு தற்காலிக தீர்வையேனும் காண வேண்டும்.
நேற்று எதிரணியில் ஒருவர் பசளை பையுடன் வந்து அரசாங்கத்தை விமர்சித்தார். அப்போது, சஜித் பிரேமதாசவின் வீட்டுத் திட்டத்தை அப்படியே கிளப்பிக் கொண்டு வந்து பதில் சொல்லலாம் போல தோன்றியது.
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் பற்றி கவலைப்படாத தமிழ் தலைமைகளின் மத்தியில், எமது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் துணையுடன் தீர்த்து வருகிறோம். தமிழ் எம்.பிக்கள் பலர் பாராளுமன்றத்தில் இனவாதத்தை தவிர வேறொன்றையும் பேசுவதாக தெரியவில்லை. முஸ்லிம் மக்களிற்காக இன்று பேசும் தமிழ் தலைமைகள் பலர் கடந்த தேர்தலில் முஸ்லிம் மக்களை பற்றி கடுமையாக விமர்சித்தவர்களே. ரிசாட் பதியுதீனுக்காக பேசுபவர்களும் உள்ளனர். யாருக்கு வாக்களித்தாலும் ரிசாத் பதியுதீனுக்கு வாக்களிக்க வேண்டாமென சொன்ன இந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள், இங்குள்ளனர்.
புலம்பெயர் தமிழ் தரப்புக்களும் பேச தயாரென ஜனாதிபதி கூறியதும் கொதித்து எழுகின்றீர்கள். அப்படி பேசினால் உங்களின் பிழைப்பில் மண் விழுந்து விடுமே. என்றுமே நீங்கள் மக்கள் நலன்பற்றி சிந்திப்பதில்லை. அப்படி சிந்தித்திருந்தால், இறுதி யுத்த நேரம் உங்கள் தொலைபேசிகளை நிறுத்தி விட்டு சொகுசு அறைகளில் ஓய்வெடுத்திருக்க மாட்டீர்கள்.
குற்றவிசாரணையை இராணுவத்திற்கும், புலிகளிற்கும் மட்டுமல்ல, கூட்டமைப்பிலுள்ள தமிழ் அரசு கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளிற்கும் முன்னெடுக்க வேண்டும். ரெலோ இயக்கத்தை ஆதரித்தார்கள் என்பதற்காக சாவகச்சேரியில் ரயர்களை கொளுத்தி விட்டு அப்பாவி இளைஞர்களின் கை, கால்களை கட்டிவிட்டு உயிருடன் அதற்குள் போட்டார்கள். தமிழ் இளைஞர்களை சுடும் உமிக்குள் உயிருடன் புதைத்தவர்களை பற்றி பேசுங்கள். கோவிற்குளம் முதல் சிதம்பரபரம் வரை காடுகளிற்குள் கொண்டு சென்று மரணதண்டனை விதித்தவர்களை பற்றி பேசுங்கள்.சகோதர படுகொலையை நடத்தியவர்களிற்கு ஆதரவாக கூட்டமைப்பினர் பேசுவது வேதனையானது.
கூட்டங்களில் கலந்து கொண்டால் சிங்கக் கொடி ஏற்றுகிறீர்கள். உங்கள் பொக்கற்றுக்குள் உள்ள பணத்தில் சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளது. உங்கள் வாகனங்களில் சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளது என்றார்.