தற்போதைய அரசாங்கத்திற்கு நாடு தொடர்பான ஒரு முகமில்லை. ஒரு கொள்கையில்லை. நாட்டின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா).
இன்று (6) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கத்திற்கு ஒரு கொள்கையிருக்க வேண்டும். நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களிற்கு ஒரு கொள்கையிருக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு கொள்கை, இலட்சியம், நோக்கு உள்ளது. பாராளுமன்றத்தில், எமது பிரதேசத்தில், எமது மக்களிடம், சர்வதேசத்தில் என எங்கு, எவ்விடம் சென்றாலும் நாம் காட்டுவது ஒரு முகம் மட்டுமே.
ஆனால் எமது ஜனாதிபதி தொடக்கம் பிரதமர், அமைச்சர்கள்- இந்த ஆட்சியாளர்கள் என்றல்ல, எந்த ஆட்சியாளர்களும்- டி.எஸ் சேனநாயக்க முதல் மஹிந்த, மைத்திரி, கோட்டாபய ராஜபக்ச என அனைவருக்கும் நாடு தொடர்பான ஒரு முகமில்லை. ஒரு கொள்கையில்லை. நாட்டின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்லை.
ஜனாதிபதி அண்மையில் ஐ.நாவில் ஆற்றிய உரையில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுக்கு அழைப்பு விடுத்தார். புலம்பெயர் தமிழர்களையும், அமைப்புக்களையும் தடை செய்து விட்டு, அவர்களை பேச்சுக்கு அழைப்பது நகைப்புக்கு இடமானது.
உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்றார். அவர் உரையாற்றி முடிந்ததும், அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் மனித உரிமைகளின் மாண்புகளையும், கைதிகளின் உரிமைகளையும் சிறப்பாக கவனித்தார். இதுதான் உள்நாட்டு பொறிமுறை. ஒரு சோறு உதாரணம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, சர்வதேசத்திற்கு 13 பிளஸ் என வாக்களித்தார். எதை எப்படி பேசி, தேவையானதை அடையும் பக்குவம் பெற்றவர்கள் எமது ஆட்சியாளர்கள். அதன் தொடர்ச்சிதான், ஐ.நாவில் வைத்து ஜனாதிபதி புலம்பெயர்ந்தவர்களிற்கு விடுத்த அழைப்பு.
உள்நாட்டில் தடைசெய்துவிட்டு, அவர்களை பேச்சுக்கு அழைக்கிறார். இது அவரது அவசரத்தில், அவசியத்தில், புத்திமங்கிய நிலையையே காட்டுகிறது.
கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானமேறி வைகுண்டம் காட்டுவானாம். அப்படி எமக்கு வைகுண்டம் காட்டும் உரையே அவரது உரை.
தமிழ் மக்கள் தொடர்பாக, அவர்களின் 60 ஆண்டுகால அரசியல் போராட்டம் தொடர்பாக எவ்வித தெளிவுமில்லாதவர்கள் ஆட்சியாளர்கள். ஜனாதிபதி ஒரு கருத்து, பிரதமர் ஒரு கருத்து, ஜனாதிபதி சார்பான அமைச்சர்கள் ஒரு கருத்து, பிரதமர் சார்பான அமைச்சர்கள் ஒரு கருத்து. தமிழர்களிற்கு பிரச்சனையுள்ளது என்பவர்கள் ஒரு பக்கம். தமிழர்களிற்கு என்ன பிரச்சனையென்பவர்கள் மறுபுறம். இவர்களா எமது பிரச்சனைகளை தீர்ப்பார்கள்.
13வது திருத்தச்சட்டம் ஏன், எப்படி உருவானதென்பதை அறிந்து கொள்ள வேண்டும். இன்று 3,4 வருடங்களாக மாகாணசபை தேர்தல்கள் நடக்காமல், குட்டி ஜனாதிபதிகளான ஆளுனர்களின் கைகளில் மாகாணசபைகள் உள்ளன. உடனடியாக மாகாணசபை தேர்தல்களை நடத்தி, மாகாணங்களிற்குரிய பூரண அதிகாரங்களை வழங்க வேண்டும் என்றார்.