தொலைக்காட்சியின் ரிமோட் கொன்ட்ரோலுடன் மட்டக்களப்பை சேர்ந்த இளைஞர்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கதிர்காமத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே, இவ்விருவரும் நேற்று முன்தினம் (03) கைது செய்யப்பட்டனர் என கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஞானசூரியம் சதுக்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் இருவர், கொக்கட்டிச்சோலை கோவிலுக்கு சென்று வருவதாக தெரிவித்து வீட்டை விட்டு வெளியேறி கதிர்காமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
கதிர்காமத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர், மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளார். அதிலொருவர் தனது முதுகில் கொளுவியிலிருந்த பையில், ரிமோட் கொன்றோலர், பற்றிகள் மற்றும் டேப்ரோல்கள் இருந்துள்ளன.
அதனையடுத்து, மனேகர் கிசோக், கிருபைரெட்ணம் சதுர்சன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவருக்கும் 23 வயதாகும். வீட்டிலிருந்த சகோதரன் ரிமோட் கொன்ட்ரோல் உள்ளிட்ட பொருள்களை அந்தப் பையில் மறைத்து வைத்துள்ளார் என்றும்,
அவசரமாக வீட்டைவிட்டு கிளம்பியமையால், ஆடைகளை எடுத்துவைத்த அந்தப் பையை முறையாக பார்க்கவில்லை என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் தொடர்பிலும் அவர்களது பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை மீறி அவ்விருவரும் பயணித்துள்ளனர் எனத் தெரிவித்த கதிர்காமம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.