சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக கனமழை பெய்தது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளில் (5.8 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று (அக். 05) தென் மாவட்டங்கள் மற்றும் அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் டெல்டா (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதேபோன்று, சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை முதலே சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே கனமழை பெய்தது. அதேபோன்று, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.