ஊரெழு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவத்தை தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் உள்ளிட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு, பொக்கணை முருகன் கோயிலடியில் நேற்று இரவு சுன்னாகம் பொலிசார் வீதிக்கடமையில் ஈடுபட்டிருந்த போது, தலைக்கவசம், முகக்கவசம அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஈ.பி.டி.பியின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரை வழிமறித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு கூடிய இளைஞர்கள் சிலர் பொலிசாருடன் முரண்பட்டுள்ளனர். அங்கு ஆட்கள் கூடி, தர்க்கம் அதிகரிக்கவே பொலிசார் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து கூட்டம் கலைந்தது.
பின்னர், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில், ஈ.பி.டி.பி உறுப்பினருக்கு தண்டச்சீட்டு வழங்கிவிட்டு அங்கிருந்த சென்றனர்.
இந்த நிலையில், இன்று காலையில் ஈ.பி.டி.பியின் பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர் சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக அவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.