கிராமிய அபிவிருத்திக்காக வெற்றி பெற்ற வட்டார உறுப்பினருக்கு 4 மில்லியன் ரூபாயும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுக்கு 20 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது என மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வவுனியா மாவட்டத்திற்கான கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் தற்போதைய அரசியல் நிலவரங்கள், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கான யோசனைகள் குறித்தும் பேசினோம். கிராம மட்டத்திலான உரையாடல்கள் மூலம் அம் மக்களின் தேவைகளைப் பெற்றுள்ளோம். எமது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்கள் கிராமத்தினுடைய தேவைப்பாடுகளை அப் பகுதி மக்கள் ஊடாக பெற்றுத் தருமாறு எமக்கு அறிவுறுத்தியதற்கமைய நாம் தகாவல்களைப் பெற்று வருகின்றோம்.
கிராமிய அபிவிருத்திக்காக ஒரு கிராம சேவையாளர் பிரிவுக்கு 3 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெற்றி பெற்ற வட்டார வேட்பாளருக்கு 4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு 20 மில்லியன் ரூபாயும், பாராளுமன்ற உறுப்பினருக்கு 100 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் அவற்றை சரியான முறையில் பயன்படுத்த தேவைகளை அடையாளப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்.
இந்த அரசாஙகத்தால் பல வேலைத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சியினர் பல குறைகளை கூறுகின்றார்கள். உண்மை நிலையை மக்களுக்கு நாம் கூறி வருகின்றாம் எனத் தெரிவித்தார்.