பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் விரைவில் இணைவார் என்று கூறப்படுகிறது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து இதுகுறித்து பேசினார். இதனால், காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், கட்சியின் முக்கிய தலைவர் களில் ஒருவரான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. அமரீந்தரின் எதிர்ப்பை மீறி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். அதன்பிறகு இருவருக் கும் இடையேயான மோதல் வலுத்தது.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலை யில், நவ்ஜோத் சிங் சித்துவின் நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. தொடக்கத் தில் துணை முதல்வர் பதவியை எதிர்பார்த்து சித்து காய்களை நகர்த்தி வந்தார். ஆனால், சித்துவுக்கு துணை முதல்வர் பதவி தரவே முடியாது என்பதில் அமரீந்தர் சிங் உறுதியாக இருந்தார்.
அதன்பின்னர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தூண்டிவிட்டார் சித்து. அப்போதும்கூட காங்கிரஸ் மேலிடம் அமரீந்தர் சிங்குக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தது. ஒரு கட்டத்தில் அமரீந்தர் சிங்குக்கு எதிராக 50 எம்எல்ஏக்களை சித்து தூண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அமரீந்தர் சிங் பதவிக்கு ஆபத்து வந்தது.
இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமரீந்தர் சிங், ‘‘நான் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறேன். எனது அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து விரைவில் அறிவிப்பேன். காங்கிரஸ் தலைமை யாரை நம்புகிறதோ, அவருக்கு முதல்வர் பதவியை வழங்கட்டும். இப்போதும் நான் காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். எனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து எதிர்கால திட்டம் குறித்து முடிவு செய்வேன்’’ என்றார்.
‘‘ராகுல், பிரியங்கா ஆகியோர் அனுபவமற்றவர்கள். அவர்களை தவறாக வழிநடத்துகின்றனர்’’ என்று கூறி காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னியை கட்சி மேலிடம் அறிவித்தது. அவரும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார்.
இதனிடையே, கட்சி மேலிடத்துடன் அதிருப்தியில் இருந்த அமரீந்தர் சிங், தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். அவர் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், நேற்று டெல்லி சென்றார்.
டெல்லியில் நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை அவரது வீட்டில் அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நீடித்தது. சந்திப்பு முடிந்து வெளியே வந்த அமரீந்தரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால், அவர் யாரையும் சந்திக்காமல் 2-வது கேட் வழியாக வெளியே சென்றுவிட்டார்.
இதுகுறித்து அமரீந்தர் சிங்குக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறும்போது, ‘‘அமரீந்தர் சிங் டெல்லி வந்துள்ளதால், மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. அதில் அரசியல் எதுவும் இல்லை’’ என்றார்.
அமரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவ்நீத் துக்ரால் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘நீண்ட நாட்களாக நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிப்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷாவை அமரீந்தர் சிங் சந்தித்தார். 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை அமித் ஷாவிடம் அவர் வலியுறுத் தினார்’ என்று தெரிவித்துள்ளார்.
அமித் ஷாவை, அமரீந்தர் சிங் சந்தித் துப் பேசியது காங்கிரஸ் மேலிடத்துக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கும் அமரீந்தர் சிங், பாஜகவில் விரைவில் இணைய வாய்ப்புள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் மாநிலத்தில் பலமான தலைவரை பாஜக தேடிக் கொண்டிருந்தது. இந்நிலையில், அமரீந்தர் சிங் தங்கள் பக்கம் வந்தால் பஞ்சாபில் கட்சி வலுவடையும் என பாஜக மேலிடம் கருதுகிறது. இதையடுத்து அமரீந்தர் சிங்குடன் பாஜக மூத்த தலைவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் பாஜகவில் இணையும் அறிவிப்பை அமரீந்தர் வெளியிடலாம் என்று எதிர்பார்ப்பதாக கட்சி வட்டாரங் கள் தெரிவித்தன.
சமாதானம்
இதனிடையே, அதிருப்தியில் உள்ள அமரீந்தர் சிங்கை சந்தித்து சமாதானம் செய்ய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முயன்று வருகின்றனர்.
காங்கிரஸில் ஜி-23 என்று அழைக்கப் படும் கட்சியின் மூத்த தலைவர்கள் கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரும் அமரீந்தர் சிங்கை தொடர்பு கொள்ள முயன்று வருகின்றனர். பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தூணாக இருக்கும் அமரீந்தர் சிங்கை இழக்கக் கூடாது என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரியும், அமரீந்தர் சிங்கை தொடர்புகொண்டு பேசுவதற்கு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.