தமிழ் அரசியல் கைதிகளை தனது சப்பாத்தை நக்கி சுத்தப்படுத்தவைத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினை மட்டக்களப்புக்கு கூட்டிவந்தது அவரது கால்களை நக்கவா என கேள்வியெழுப்பியுள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், லொஹான் ரத்வத்தை ஒரு கனவான் அரசியல்வாதியல்ல, கழிசறை அரசியல்வாதி என்றார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
காணமல்போனோருக்கு மரணச்சான்றிதழ் வழங்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ள நிலையில் இராணுவத்திடம் சரணடைந்த ஈரோஸ் தலைவர் பாலகுமாரன் அவரது மகன் ஆகியோர் எங்கே எனவும் கேள்வியெழுப்பிய அவர், அவ்வாறானால் அவர்கள் கொல்லப்பட்டுள்ளார்களா எனவும் அவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டிருந்தால் இலங்கை அரசாங்கம் கொலைக்குற்றவாளியென்பதை ஏற்றுக்கொள்கின்றது என்பதே அதன் அர்த்தம் என்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலருக்கு தமிழ்த் தேசிய அரசியல் வரலாறு தெரியாது. அவர்கள் மாவை சேனாதிராஜாவிடம் கற் கவேண்டும். கற்றுக்குட்டி அரசியல் செய்யவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்புக்கு ஒரு கரும்புள்ளி ஏற்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை கடந்த சில நாட்களாக தமிழ் மக்கள் மத்தியில் பேசப்பட்டவர். அவர் மட்டக்களப்புக்கு வந்து கட்சி அரசியலில் ஈடுபட்டிருக்கின்றார். சிறிலங்கா பொதுஜன பெரமுன மட்டக்களப்பு அலுவலகத்தில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் ஆகியோருடன் சந்திப்பினை நடத்தி விட்டுச் சென்றுள்ளார்.
அனுராதபுர சிறைச்சாலையில் மதுபோதையில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன்பாக முழந்தாளிட வைத்து துப்பாக்கியை தலையில் வைத்து அச்சுறுத்தியவர் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை. அதற்கும் மேலாக தமிழ் அரசியல்கைதிகளை தனது சப்பாத்தினை நக்குமாறு கோரி அவமானப்படுத்தியிருந்தார். அவ்வாறான ஒருவரை மட்டக்களப்புக்கு அழைத்துவந்து சந்திப்பினை மேற்கொண்டதானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
லொஹான் ரத்வத்தையின் தகப்பனார் அநுருத்த ரத்வத்தை, நான் பாராளுமன்றத்தில் இருந்த 1989 இல் பாராளுமன்றத்தில் இருந்தார். 1988ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பிரேமதாசாவிற்கு எதிராக போட்டியிட்ட சிறிமாவிற்கு ஆதரவளிக்கும்படி, தமிழீழ விடுதலைப் புலிகளை நேரில் சென்று ஆதரவு கேட்டவர். நீங்கள் தேர்தலில் வெல்ல தமிழ் மக்களின் ஆதரவு வேண்டும். உங்களது மகன் அதிகாரத்திலுள்ள போது தமிழ் அரசியல் கைதிகளை அவமானப்படுத்துகிறார்.
கண்டியில் 11 முஸ்லிம் இளைஞர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தகப்பனும், மகனும் தொடர்புபட்டதாக வழக்கிருந்தது.
நான் பொதுவாக சக அரசியல்வாதிகளை விமர்சிப்பதில்லை. இந்த போராட்டத்தில் நேரடியாக தொடர்புபட்டவன் என்ற அடிப்படையில் எனது இரத்தம் கொதிக்கிறது. லொஹான் ரத்வத்தையின் சப்பாத்து கால்களை நக்கவா அவரை இங்கு அழைத்து வந்துள்ளீர்கள் என, அவரை அழைத்து வந்தவர்களை கேட்க விரும்புகிறேன். இது நான் மட்டும் கேட்பதல்ல, ஒட்டுமொத்தமாக தமிழர்கள் உங்களிடம் கேட்கும் கேள்வி.
லொஹான் ஒரு கனவான் அரசியல்வாதியல்ல. அவர் கழிசடை அரசியல்வாதி. அந்த கழிசடை அரசியலை இங்கு கொண்டு வர வேண்டாம்.
லொஹான் விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதற்குள் நீங்கள் அவரை பிணையெடுக்க முயற்சிக்கிறீர்கள் என்றார்.