நாட்டில் அத்தியாவசிய தேவையான உணவுப்பொருட்களிற்கு தட்டுப்பாடு நிலவுவதையும், இந்த நெருக்கடிக்குள்ளும் மதுபான கடைகள் திறக்கப்பட்டதைம் சுட்டிக்காட்டி, பொம்மை, வெற்று பால் புட்டி, மதுபான போத்தலுடன் பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் ஒருவர் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காலி மாவட்டத்தின், இமதுவ பிரதேசசபை அமர்வில் நேற்று இந்த சம்பவம் நடந்தது.
பிரதேசசபை அமர்வு ஆரம்பித்ததும், பொம்மை மற்றும் வெற்று பால் புட்டியுடன் சபை நடுவே எழுந்து வந்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் அருண, குழந்தை பாலின்றி அழுவதாகவும், அதற்கு பால் வேண்டுமென்றும் கூறினார்.
பிரதேசசபையின் ஆளுந்தரப்பான பொதுஜன பெரமுனவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். தவிசாளர் சரத் குமார, அவரை ஆசனத்தில் அமரும்படி வலியுறுத்தினார்.
எனினும், நாடு முழுவதும் குழந்தைகள்அழுது கொண்டிருப்பதாகவும், குழந்தைகளிற்கு எங்கே பால் வாங்கலாமென கேள்வியெழுப்பினார்.
அத்துடன், சாராயப் போத்தலை காட்டி, இது மட்டுமே நாட்டில் தாராளமாக கிடைப்பதாக குறிப்பிட்டார்.