தமிழில் கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்தவர் மூன் மூன் தத்தா. இந்தியில் ஹாலிடே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
தற்போது தாரக் மேத்தா கா ஊல்டா என்ற டி.வி தொடரில் நடித்து வருகிறார். அந்த தொடரில் ராஜ் அனத்கத் என்பவரும் நடிக்கிறார். இவருக்கு மூன்மூன் தத்தாவை விட 9 வயது குறைவு. இந்த நிலையில் ராஜ் அனத்கத்தை மூன்மூன் தத்தா காதலிப்பதாக தகவல் பரவியது.
அதை பார்த்த சிலர் சமூக வலைத்தளத்தில் மூன்மூன் தத்தாவை கேவலமாக விமர்சித்து பதிவுகள் வெளியிட்டனர். இதனால் கோபமான மூன்மூன் தத்தா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமூக வலைத்தளத்தில் என்னை இழிவாக விமர்சித்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. என்னை இந்தியாவின் மகள் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக உள்ளது. இந்த துறையில் 13 ஆண்டுகளாக இருக்கும் என்னை இழிவுபடுத்த 13 நிமிடங்கள் கூட ஆகவில்லை. யாருக்கேனும் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டால் அதற்கு உங்கள் வார்த்தைகள் காரணமாக இருக்குமா என்று யோசித்து பாருங்கள்’’ என்று கூறியுள்ளார்.