பீகார் மாநிலத்தில். 11 கட்டமாக நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் செப்டம்பர் 24ஆம் தேதி அன்று முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர் உறுப்பினர் என்று 2.50 இலட்சம் பதவிகளுக்கு சுமார் 10 இலட்சம் பேர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 6 கோடியே 38 இலட்சம் வாக்காளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க இருக்கிறார்கள்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தின் கதிஹார் மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் ஆசாத் ஆலம் என்கிற வேட்பாளர் எருமை மாட்டின் மீது சவாரி செய்த மனு தாக்கல் செய்ய வந்தார். அவருடன் ஆதரவாளர்கள் திரண்டு வந்தனர்,
தலைப்பாகை கட்டிக்கொண்டு கையில் பெரிய குச்சியுடன் அலங்கரிக்கப்பட்ட எருமை மாட்டின் மீது அமர்ந்து அவர் வந்தது அப்பகுதியினர் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். அது வைரலாகி வருகிறது.
எருமை மாட்டின் மீது சவாரி செய்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆசாத் ஆலம், “நான் கால்நடைகளை மேய்ப்பவன். என்னால் பெட்ரோல், டீசலுக்கு செலவு செஞ்சு வண்டியில் வரும் வசதி கிடையாது. அதனால்தான் எருமை மாட்டின் மீது சவாரி செய்து வந்தேன்“ என்று தெரிவித்திருக்கிறார்.
பீகாரில் தற்போது பெட்ரோல் விலை ரூ. 105ஐ தாண்டிவிட்டது. டீசல் விலை 96 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான் எருமை மாட்டில் அமர்ந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் ஆசாத் ஆலம்.