மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் ஹமீது முஹம்மது முஜாஹிரை நாளை செவ்வாய்க்கிழமை(14) தொடக்கம் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபை அங்கத்தவர் பதவியில் இருந்து நீக்கும் வகையில் இன்றைய தினம்(13) விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி உள்ளது.
வடமாகாண ஆளுனர் பியன்சியா சறோஜினிதேவி மன்மராஜா சார்ள்ஸின் கையெழுத்துடன் வெளியான இந்த வர்த்தமானி அறிவித்தலில்,
1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள்,சட்டத்தின் 2 ஆம் பிரிவுடன் சேர்ந்து வாசிக்கப்பட வேண்டிய 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 185(1) உப பிரிவில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைய எனக்களிக்கப்பட்ட அதிகாரங்களின் பிரகாரம் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் அவர்களால் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் திட்டத்தின் 185 (1) உப பிரிவில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைய எவையேனும் தகுதியின்மைகள் உள்ளனவா என்பது பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 185 (2) ஆம் உப பிரிவிற்கமைவாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதி அலுவலகர் கந்தையா அரியநாயகம் அவர்களின் கீழ் அமைக்கப்பட்ட தனி நபர் விசாரனைக்குழுவினால் விசாரனை செய்யப்பட்டு வாதித்தரப்பின் சாட்சியங்களைக் கவனத்தில் கொண்டதன் பின்பு தனி நபர் விசாரனைக் குழுவின் அவதானிப்புக்கள் மற்றும் தீர்ப்புக்களுடன் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள 02-08-2021 ஆம் திகதி இறுதி அறிக்கையின் பிரகாரம்,
சாகுல் கமீது முஹம்மது முஜாஹிர் அவர்கள் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அப்பதவியில் பணிகள்,கடமைகளை நிறைவேற்றும் போது 1987 ஆண் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் உப பிரிவு 185 (1)(இ),(அ) ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை புரிந்தார் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் உள்ளன என நான் திருப்தியடைகின்றமையால்
1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க , மாகாண சபைகள் (இடை நேர் விளைவான ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவுடன் சேர்ந்து வாசிக்கப்பட வேண்டிய 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 185 (1) உப பிரிவுகளின் மூலம் எனக்களிக்கப்பட்ட அதிகாரங்களின் பிரகாரம் வடமாகாணத்தின் ஆளுநர் பியன்சியா சறோஜினிதேவி மன்மத ராஜா சார்ள்ஸ் ஆகிய நான் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் திரு சாகுல் ஹமீது முகம்மது முஜாஹீர் அவர்களை 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் (14-09-2021) பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபை அங்கத்தவர் பதவியில் இருந்து நீக்கம் செய்கிறேன்.என இன்று திங்கட்கிழமை மாலை வெளியாகிய ; விசேட வர்த்தமான பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.