தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. உள்ளாடை இறக்குமதி தடை செய்யப்பட்டதற்கு நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிர்த்தரப்பினர் மாத்திரம் உள்ளாடை விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு உரிய வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி பிரத்தியேகமாக இராஜாங்க அமைச்சினை ஸ்தாபித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் 623 அத்தியாவசியமற்ற பொருட்களின் உத்தரவாத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் பல பொருட்கள் அடங்குகின்றன.
ஆனால் எதிர்த்தரப்பினர் தங்களின் அரசியல் பிரசாரத்திற்காக உள்ளாடை தடையை மாத்திரம் தெரிவு செய்துள்ளார்கள். இவர்களுக்கு மக்கள் தேர்தலின் போது தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.