தமிழகத்தில் கொரோனா முதல் அலையின்போது செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் அதிகம் இடம்பெற்று வந்த ஒரு பெயர்தான் சித்த மருத்துவர் வீரபாபு. கொரோனாவுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சைகள் ஒருபக்கம் நடந்து வர, அரசின் அனுமதியுடனுடம் நிதியுதவியுடனும் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சித்த மருத்துவர் வீரபாபு சென்னையில் தனி முகாம் அமைத்து அரசு நிதி உடன் சிகிச்சை அளித்து வந்தார்.
இந்த முகாமில் சிகிச்சை பெற்று நலம் பெற்றவர்கள் ஏராளம். அரசியல் பிரபலங்களும் திரைப்பட பிரபலங்களும் சித்த மருத்துவர் வீரபாபுவிடம் சிகிச்சை பெற்று நலம் பெற்று உள்ளனர். இதனால் மிகவும் பிரபலமானார் சித்த மருத்துவர் வீரபாபு.
இந்நிலையில் சித்த மருத்துவத் துறையில் இருந்து திரைத்துறைக்கு சென்றிருக்கிறார் வீரபாபு . ‘முடக்கறுத்தான்’ என்கிற திரைப்படத்தை அவரே இயக்கி அவரே நாயகனாக நடித்திருக்கிறார். சித்த மருத்துவத்தில் அதிகம் இடம்பெறும் மூலிகையின் பெயரையே படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கும் வீரபாபு, குழந்தைகளின் வாழ்க்கையை பற்றிய கதை இது என்கிறார்.