மன்னார் மாவட்டத்தில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலையும் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. இவர்களுடன் சேர்த்து மன்னார் மாவட்டத்தில் 22 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
அவர் இன்று(8) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 72 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் தடுப்பூசி எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை. இன்று புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தவர் 78 வயதுடைய பெண். இவர் அண்மையில் தடுப்பூசி ஒன்றை பெற்றுக் கொண்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் இது வரை 22 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
மேலும் நேற்றைய தினம் புதன் கிழமை (7) மன்னார் மாவட்டத்தில் புதிதாக 31 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் 1806 கொரோனா தொற்றாளர்களும், மன்னார் மாவட்டத்தில் இது வரை 1823 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் இன்றைய தினம் வியாழக் கிழமை முதல் மன்னார் மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், முருங்கன் டொன் பொஸ்கோ தொழில் பயிற்சி நிலையம் மற்றும் இரணை இலுப்பைக்குளம் ம.வி ஆகியவற்றில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
-நாளை வெள்ளிக்கிழமை (9) மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி, நானாட்டான் டிலாசார் பாடசாலை, மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மறிச்சிக்கட்டி அல் ஜெசிரா பாடசாலை மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.