இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கையை சுலபமாக தோற்கடித்து, 1-1 என தொடரில் சமநிலையை எட்டியுள்ளது தென்னாபிரிக்கா.
நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாக இருந்த நிலையில் சீரற்ற காலநிலையால் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்களை இழந்து 283 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
தென்னாபிரிக்கா அணி சார்ப்பில் மலான் 121 ஓட்டங்களையும் ஹென்ரிக்ஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.
பந்துவீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் சாமிக கருணாரத்ன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.
284 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட இலங்கை அணி களமிறங்கிய நிலையில் மீண்டும் போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனையடுத்து போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இலங்கை அணிக்கு டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 41 ஓவர்களில் 265 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை அணி 36.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 19 ஓட்டங்களிற்குள்ளேயே முதல் 3 விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 77 ஓட்டங்களையும், சம்மிக்க கருணாரத்ன 36 ஓட்டங்களயும் பெற்றனர்.
பந்து வீச்சில் தப்ரைஸ் ஷம்ஸி 49 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
ஆட்டநாயகனாக சதமடித்த மாலன் தெரிவானார்.
அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.