இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என குறிப்பிடும் ஆவணத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்புவதற்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு அங்கீகாரம் அளித்துள்ளது.
இன்று இணைய வழியாக நடந்த இந்த கூட்டத்தில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், பொ.செல்வராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், த.கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆவணத்தில் கிட்டத்தட்ட அரைவாசி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட மாட்டார்கள் என்பது உறுதியானதையடுத்து, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கையொப்பத்துடன் கடிதம் அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டம், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் தலைமையில் நடந்தது. ஆரம்பத்தில் உரையாற்றிய மாவை சேனாதிராசா, தமிழ் கட்சிகள் கூட்டாக தயாரித்த ஆவணம் அனுப்பப்பட்டிக்காது, அதனால் அவர்களுடன் பேசி, மீண்டும் ஒரு ஆவணம் தயாரித்து அனுப்பலாமென யோசனை தெரிவித்தார்.
எனினும், எம்.ஏ.சுமந்திரன் அதனை மறுத்தார். தமிழ் கட்சிகள் கூட்டாக தயாரித்த ஆவணம் அனுப்பப்பட்டு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டு விட்டது, அதை ஐ.நாவிலிருந்தும் நான் உறுதி செய்தேன் என குறிப்பிட்டார்.
பின்னர், அவர் விளக்கமளிக்கையில், “கடந்த 28ஆம் திகதி தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இணைய வழி கலந்துரையாடலில் ஈடுபட்ட போது, மிக தாமதமாக என்னையும் இணைப்பில் இணைத்தனர். அப்போது நடந்த கலந்துரையாடில் ஐ.நாவிற்கு அனுப்பும் ஆவணத்தை தயாரிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடி ஆவணம் தயாரிப்பதென அதில் முடிவெடுத்ததால், நான் சம்பந்தனுடன் மட்டும் கலந்துரையாடி ஆவணத்தை தயாரித்தேன்.
ஆவண தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது ரெலோவின் அறிக்கையை, அதன் பேச்சாளர் சுரேன் அனுப்பியிருந்தார். கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் கையொப்பமும் அதிலிருக்கவில்லை. அவர் ஒரு கட்சியின் பேச்சாளர். இப்படியான நடவடிக்கையை செய்ய அவர் யார்? அதனால் நாம் அதை கணக்கிலெடுக்கவில்லை“ என குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட வசனம் ஏன் இதில் இணைக்கப்பட்டதென கேள்வியெழுப்பப்பட்ட போது, பான்கீ மூனின் நிபுணர்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பகுதியையே அதில் இணைத்தேன் என குறிப்பிட்டார். (எமக்கு உடன்பாடற்ற மேற்கோள் ஒன்றை இணைக்கமாட்டோம், உடன்பாடுள்ளமையினாலேயே இந்த மேற்கோள் இணைக்கப்பட்டது. புலிகளின் போர்க்குற்றங்களை தமிழ் அரசுக்கட்சியும் அங்கீகரிப்பதாலேயே அது இணைக்கப்பட்டது என்ற தர்க்கரீதியான கருத்தை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த யாரும் எழுப்பவில்லை).
இதையடுத்து, இராணுவமும், புலிகளும் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்ற ஆவணத்தில் திருத்தம் செய்யாமல் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
நாளை கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தை, நாடாளுமன்றத்தில் கூட்டி, தமிழ் கட்சிகள் கூட்டாக ஆவணம் தயாரித்த விடயத்தை ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அம்பாறை தேசியப்பட்டியல் எம்.பி த.கலையரசன், இந்த விவகாரத்தில் மக்கள் குழப்பமாக இருக்கிறார்கள், மக்களை தெளிவுபடுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
நாளை தமிழ் அரசு கட்சி செய்தியாளர் சந்திப்பை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.