காபூலுக்கு வடக்கே உள்ள பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்ற முயன்ற தலிபான்களிற்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளதாக, ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணி (NRF) அறிவித்துள்ளது. தலிபான் அணி சுற்றிவளைத்து நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தலிபான்கள் சரணடைந்துள்ளனர் என எதிர்ப்பாளர் அணி அறிவித்துள்ளது.
பஞ்ச்ஷீர் மாகாணத்திலுள்ள தலிபான் எதிர்ப்பு தலைவர் அஹ்மத் மசூத்தின் படையணி, ஞாயிற்றுக்கிழமை கவாக் கணவாயில் ஆயிரக்கணக்கான தலிபான்களை சுற்றி வளைத்து நிர்மூலமாக்கியதாகவும், தஸ்தே ரேவாக் பகுதியில் தலிபான்கள் வாகனங்கள் மற்றும் உபகரணங்களை கைவிட்டு தப்பியோடியதாகவும் ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணி செய்தித் தொடர்பாளர் ஃபாஹிம் தஷ்டி தெரிவித்துள்ளார்.
“கடும் மோதல்கள்” நடந்து கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
நூற்றுக்கணக்கான தலிபான் போராளிகள் ஞாயிற்றுக்கிழமை கைதிகளாக பிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஆதாரங்கள் உறுதிசெய்ததாக வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 1,500 தலிபான்கள் சரணடைந்ததாக உள்ளூர் ஆதாரங்கள் குறிப்பிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தஷ்டி தனது ருவிட்டர் பக்கத்தில், சுற்றிவளைக்கப்பட்டதால் தப்பிக்க முடியாமல் கிட்டத்தட்ட 1,000 தலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது சிறைப்பிடிக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
எனினும், தகவல்களை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
இதற்கிடையில், தலிபான் செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி, தனது ருவிட்டரில் இன்று இட்ட பதிவில், தமது படைகள் மாகாணத்தின் ஏழு மாவட்டங்களில் ஐந்தைக் கைப்பற்றியதாகக் கூறினார்.
“முஜாஹிதீன்கள் (தலிபான் போராளிகள்) மாகாணத்தின் மையத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.