யாழ்ப்பாணம், மருதனார்மடத்தில் பழ வியாபாரி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் ஆவா குழுவை சேர்ந்த இரண்டு ரௌடிகள் நேற்று (4) இரவு சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
சுன்னாகம், சபாபதிப்பிள்ளை முகாம் வீதியை சேர்ந்தவர்களே கைதாகியுள்ளனர்.
கடந்த 1ஆம் திகதி இரவு 7 மணியளவில் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது.
மருதனார்மடம் சந்தியில் பழ வியாபாரத்தில் ஈடுபட்டவர் மீது, இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
காயமடைந்தவருக்கும், ஆவா ரௌடிக்குழு தலைவனிற்குமிடையில் சில தினங்களின் முன் ஏற்பட்ட முறுகல் சம்பவமொன்றின் எதிரொலியாக இந்த வாள்வெட்டு நிகழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது.
மருதனார்மடத்தில் வாள்வெட்டுக்கு இலக்கானவரும், ஆவா குழு தலைவன் எனப்படும் வினோதன் என்பவரும் நண்பர்கள். சில தினங்களின் முன் ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டு, அந்த இடத்திலேயே ஆவா தலைவன், பழ வியாபாரியை தாக்கியுள்ளார்.
அது குறித்து பழ வியாபாரி பொலிஸ் முறைப்பாடு எதுவும் செய்யவில்லை.
எனினும், வலி அதிகரித்ததை தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு வைத்தியசாலை பொலிசார் துருவித்துருவி விசாரித்ததில் உண்மையை கண்டறிந்தனர்.
“அண்ணன் அடித்த அடியை தாங்கிக் கொண்டு பேசாமல் இருக்காமல், வைத்தியசாலைக்கு சென்று, பொலிசில் சிக்க வைத்தாயா?“ என கொதிப்படைந்த ஆவா ரௌடிகளே, மறுநாள்- 1ஆம் திகதி- மருதனார்மட சந்தியில் பழ வியாபாரியை வாளால் வெட்டியுள்ளனர்.