நியூசிலாந்து, ஒக்லாந்து நகரில் நியூ லின் மோல் கவுண்ட்டவுனில் நடந்த கொடூரமான கத்திக்குத்து தாக்குதலை நடத்திய இலங்கையர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கையர் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் ஆவார், அவர் முன்பு “தனி ஓநாய்” கத்தி தாக்குதலை திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளி 32 வயதானவர். சட்டக்காரணங்களிற்காக “எஸ்” என்று மட்டுமே நியூசிலாந்து ஊடகங்களால் குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் பல ஆண்டுகளாக காவல்துறையின் கண்காணிப்பில் இருந்தார்.
எஸ் இரண்டு முறை பெரிய வேட்டை கத்திகளை வாங்கி இஸ்லாமிய அரசு வீடியோக்களை வைத்திருந்தமைக்காக, பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆயுத தந்திரோபாய குழு மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனங்கள் உட்பட காவல்துறையினரின் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்தார்.
பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதியொருவரின் தீர்ப்பையடுத்து, குறைந்தளவான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மே 26 அன்று, இஸ்லாமிய அரசுக்கு ஆதரவான பிரச்சார குற்றச்சாட்டில் ஒரு நடுவர் மன்றத்தால் அவர் குற்றவாளி என கண்டறியப்பட்டார்.
ஒரு கைதி தலை துண்டிக்கப்பட்டதையும், தாக்குதல் ஆயுதத்தை வைத்திருப்பதையும் சித்தரிக்கும் கிராஃபிக் வீடியோ வைத்திருந்த மற்ற குற்றச்சாட்டுகளில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டபோது, எஸ் “சமூகத்தில் வன்முறையைச் செய்வதற்கான வழிமுறையும் உந்துதலும்” உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒரு வருட கண்காணிப்பில், அவர் சேவையில் ஈடுபட உத்தரவிடப்பட்டது.
விசாரணையின் போது, “நீங்கள் ஒரு கத்தி பற்றி கவலைப்படுகிறீர்கள், நான் 10 கத்திகளை வாங்குவேன் என்று சொல்கிறேன். இது எனது உரிமைகளைப் பற்றியது“ என எஸ், நடுவர் மன்றத்திடம் கூறியுள்ளார்.
அவரால் இணையத்தில் தேடப்பட்டவை பற்றிய விபரமும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது. “ஒற்றை ஓநாய் முஜாஹிதீன்களுக்கான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்”, வேட்டை கத்தி, உருமறைப்பு பேன்ட், இஸ்லாமிய அரசு உடை மற்றும் நியூசிலாந்து சிறை உடைகள் மற்றும் உணவு பற்றி தேடியுள்ளார்.
தீவிரவாத வீடியோக்களை விநியோகித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட நியூசிலாந்தின் முதல் நபரும் ஐஸ் ஆதரவாளருமான இம்ரான் பட்டேலின் வழக்கை ஆராய்ச்சி செய்ய எஸ் முயற்சித்தார். ஒரு துணையுடன் சிரியா செல்ல முயன்ற படேல் ஒக்லாந்து சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கண்ணில் மண்ணை தூவுவது பற்றிய ஐஎஸ்ஐஎஸ் செயல்பாட்டாளர்களுக்கான வழிகாட்டல் புத்தகத்தையும் அவர் இணையத்தில் தேடியுள்ளார்.
மற்றொரு கூகுள் தேடல், “மேற்கில் எப்படி வாழ்வது என்பது ஒரு முஜாஹித் வழிகாட்டி.” என தேடியுள்ளார்.
இறை நம்பிக்கையற்றவரை (காஃபீர்) எப்படி தாக்குவது? வெடிபொருட்களை தயாரிப்பது பற்றியும் அவர் இணையத்தில் தேடியுள்ளார்.
எஸ் அக்டோபர் 2011 இல் இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்கு வந்தார்.
2016 இலையுதிர்காலத்தில், அவர் தனது முகநூல் பக்கத்தில் மேற்கத்திய எதிர்ப்பு மற்றும் வன்முறை தகவலை வெளியிட்டதை தொடர்ந்து அவர் பொலிசாரின் கண்காணிப்பிற்குள் வந்தார்.
சிரியா சென்று ஐ.எஸ் அமைப்பில் சேர திட்டமிட்டதை எஸ் மசூதியில் சக வழிபாட்டாளரிடம் கூறினார்.
மே 2017 இல், சிங்கப்பூருக்கு ஒரு வழி டிக்கெட்டை முன்பதிவு செய்து, பயணத்திற்கு தயாரான போது ஒக்லாந்து சர்வதேச விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார். ஒக்லாந்தில் உள்ள எஸ் வசித்த அடுக்குமாடி குடியிருப்பைத் தேடியபோது வன்முறையை விதந்தோதும் பிரசுரங்கள், அவர் ஒரு ஏர் ரைஃபிளுடன் காட்சியளித்த படங்கள் மற்றும் அவரது மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய வேட்டை கத்தி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
எஸ் காவலில் வைக்கப்பட்டார். ஒரு வருடத்திற்கும் மேலாக பிணை மறுக்கப்பட்டது. இறுதியில் தடை செய்யப்பட்ட பொருட்களை விநியோகித்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். எஸ் ஏற்கனவே காவலில் கழித்த காலத்தின் காரணமாக, உயர் நீதிமன்ற நீதிபதியால் 2018 இல்அவருக்கு மேற்பார்வைக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனாலும், எஸ் தனது தீவிரவாத கருத்துக்களை கைவிடவில்லை. அவர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட மறுநாள் – ஓகஸ்ட் 7, 2018 – அவர் மீண்டும் வேட்டை கத்தியை வாங்கினார். எஸ் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதால், பயங்கரவாத தடுப்பு போலீசார், அவரை மீண்டும் கைது செய்தனர்.
அவரது குடியிருப்பில் மீண்டும் தேடுதல் நடத்திய போது பெரிய அளவு வன்முறை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் இஸ்லாமிய அரசு வீடியோக்கள் கண்டறியப்பட்டன. “விசுவாசமற்றவர்களை” எப்படி கொல்வது என்ற வீடியோவில் முகமூடி அணிந்த நபர் கைதியின் கழுத்து மற்றும் மணிக்கட்டுகளை வெட்டும் காட்சிகள் இருந்தன.
இந்த முறை, பயங்கரவாத ஒடுக்குமுறை சட்டத்தின் கீழ் எஸ் மீது குற்றம் சாட்ட சட்டத்தரணிகள் முயன்றனர். ஆனால் உயர் நீதிமன்றம் அதை ஏற்க மறுத்து விட்டது.