நேற்று காலமான ஊடகவியலாளர் பிரகாஷ், அவரது கடைசி ஆசையாக தனது உடலை யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கி இருந்தமையானது அவரது சிறந்த சமூக சேவைக்கு ஓர் எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளார் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன்.
ஊடகவியலாளர் ஞாானப்பிரகாசம் பிரகாஷ் நேற்று கொரோனா தொற்றினால் காலமாகியிருந்தார்.
இது தொடர்பில் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் வெளியிட்ட அஞ்சலி அறிக்கையில்,
26 வயதேயான இளம் ஊடகவியலாளர் ஞா.பிரகாஷவர்கள் கொவிட் தொற்றினால் திடீர் மரணமடைந்தார் எனும் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றுள்ளோம்.
துடிப்பாக ஓடியாடித்திரியவேண்டிய தனது பாடசாலைப்பருவத்தில் 11வயதிலேயே தனது இரண்டு கால்களின் இயங்குநிலையையும் செயல் இழந்த பிறகும் சக்கரநாற்காலி உதவியுடன் இவ்வளவு நாளும் இம்மண்ணில் போராட்டமே வாழ்வாக வாழ்ந்த போதும் சுயமுயற்சியால் தனது ஊடக மற்றும் இலத்திரனியல் அறிவையும் வளர்த்துக்கொண்டு இச்சிறிய வயதிலேயே ஒரு பெயர் சொல்லக்கூடிய பக்கம் சாராத நடுநிலையான ஒரு ஊடகவியலாளராக திகழ்ந்திருந்தார். பல பெயர் குறிப்பிடக்கூடிய ஊடகவியலாளர்கள் கூட தமது செய்தியின் உண்மைத்தன்மையை திரும்பவும் உறுதிப்படுத்துவதற்காக இவரை நாடிய சம்பவங்களும் உண்டு. அவ்வாறான திறமை மிக்க ஒரு இளம் ஊடவியலாளரை நாம் இழந்தமையானது ஓர் பேரிழப்பாகும்.
அவர் சிறந்த ஓர் ஊடகவியலாளராக மட்டுமன்றி அன்னார் அவரது கடைசி ஆசையாக தனது உடலை யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கி இருந்தமையானது அவரது சிறந்த சமூக சேவைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருந்ததுடன், பல சமூக போராட்டங்களிலும் தனது உடல்நிலை இயலாத நிலையிலும் நேரடியாகப்பங்கு பற்றியும் இருந்தார் என்பதையும் இவ்வேளையில் ஞாபகப்படுத்திப்பார்க்கின்றேன்.
பலருக்கும் தனது செய்திகள் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் கொரோனா விழிப்புணர்வையும், கொரோனா செய்திகளையும் வழங்கி வந்த அமரர் ஞா.பிரகாஷின் திடீர் இறப்புச்செய்தியானது நாமும், நமது சமூகமும் எவ்வாறான ஆபத்தில் சிக்கி உள்ளோம் என்பதையும், இன்னும் எவ்வாறான ஆபத்துகளையும் எதிர்நோக்கவுள்ளோம் என்பதற்கான ஒரு முன்னோட்டமாகும். அத்துடன் நாம் எவ்வாறான சுகாதார நடைமுறைகளின் படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது. அனைவரும் இரண்டு கட்ட தடுப்பூசிகளையும் கட்டாயமாக பெற்றுக்கொள்வதுடன் சுகாதாரத்தரப்பினரின் அறிவுறுத்தல்களையும் கவனமாகப்பின்பற்றி நடந்துகொள்ளவேண்டுமென்பதையும் வலியுறுத்திக் கேட்டுகொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.