நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெலேகால லோவர் கிப்ஸன் வீதியிலுள்ள வீடொன்றின் அருகில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி லூசகா குமாரியின் முன்னிலையில் நேற்று (1) மதியம் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது. கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டு குறை பிரசவத்தில் குழந்தையை பிரசவித்த 25 வயதான திருமணமாகாத யுவதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கெலேகால லோவர் கிப்ஸன் வீதியிலுள்ள வீடொன்றில் வசித்து வந்த 25 வயதான யுவதி, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி விட்டார். அதை வீட்டாருக்கும் தெரியாமல் மறைத்து வந்த நிலையில், அவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து பெற்றோர் விசாரித்து அறிந்து கொண்டனர். அப்போது யுவதி 4 மாத கர்ப்பிணி.
இதையடுத்து வீட்டாரின் நிர்ப்பந்தத்தினால் கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்டு, 6 மாதத்தில் குறைப்பிரசவமாக சிசுவை பெற்றெடுத்துள்ளார். சிசு இறந்த நிலையில் பிரசவமானது.
வீட்டுக்கு அருகிலுள்ள மின்கம்பம் ஒன்றின் அடியில் சிசுவை புதைத்துள்ளனர்.
சிசுவை பிரசவித்த யுவதிக்கு இரத்தப் போக்கு அதிகரித்த நிலையில், அவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகமடைந்த வைத்தியர்கள் வினவியதில், குறைமாதத்தில் சிசுவை பெற்றெடுத்து, வீட்டின் அருகில் புதைத்த தகவலை யுவதி தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை பொலிசாரின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் (31) யுவதியின் வாக்குமூலத்தை பொலிசார் பெற்றனர். பின்னர், நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, நேற்று சடலத்தை தோண்டியெடுத்தனர்.
இரத்தக்கறை படிந்த துணியொன்றினால் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.
சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. யுவதிக்கு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்வதற்காக, குடும்ப உறுப்பினர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.




